திமுகவில் வட சென்னை யாருக்கு...? மகனுக்காகக் களத்தில் குதித்த முன்னாள் அமைச்சர்!

By Asianet TamilFirst Published Mar 8, 2019, 10:31 AM IST
Highlights

2006-ஆம் ஆண்டுக்கு பிறகு ஆற்காடு வீராசாமி தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். ஸ்டாலினுக்காக பொருளாளர் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஆற்காடு வீராசாமி. 

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்த ஆற்காடு வீராசாமியின் மகன் வட சென்னை தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார். 
நாடாளுமன்றத் தேர்தலில் பொதுவாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுவது வழக்கம். இந்த முறையும் 3 தொகுதிகளில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி போன்றவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், அவர்கள் போட்டிக்கு வரப்போவதில்லை. மத்திய சென்னையில் வழக்கம்போல் தயாநிதி மாறன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அவரும் ஓசையில்லாமல் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
எனவே தென் சென்னை, வட சென்னையில் திமுக சார்பில் களமிறங்கப் போவது யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில்  நிலவி வருகிறது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் கசிகின்றன. 
வட சென்னை தொகுதியில் கடந்த முறை வழக்கறிஞர் கிரிராஜன் போட்டியிட்டார். இந்தத் தொகுதியைக் கைப்பற்ற திமுகவின் மூத்த தலைவரும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி ஆர்வம் காட்டிவருகிறார். இதுதொடர்பாக ஸ்டாலினை சந்தித்து வீராசாமி பேசியதாகவும் அறிவாலய தகவல்கள் கூறுகின்றன.
2006-ஆம் ஆண்டுக்கு பிறகு ஆற்காடு வீராசாமி தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். ஸ்டாலினுக்காக பொருளாளர் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஆற்காடு வீராசாமி. தற்போது இவருடைய மகனுக்காக ஆற்காடு வீராசாமியே சீட்டு கேட்டிருப்பதால், அவருக்கு வட சென்னை கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகின்றன.
 இதற்கிடையே 2011-ல் மாதவரம், 2016-ல் தி.நகரில் போட்டியிட்டு தோல்வியடைந்த என்.வி.என். கனிமொழியும் தென் சென்னை அல்லது வட சென்னையில் போட்டியிட ஆர்வம் காட்டிவருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

click me!