அத்துமீறும் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்.. சென்னை மண்டல குழு கூட்டத்தில் டம்மியாக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள்!

By Asianet TamilFirst Published May 13, 2022, 8:27 AM IST
Highlights

கூட்டங்களில் மண்டல குழு தலைவர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் தவிர்த்து வேறு யாரும் பங்கேற்க முடியாது. ஆனால், சென்னை மாநகராட்சி மண்டலக் கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் பங்கேற்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டலக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பங்கேற்றதாகச் சர்ச்சை உருவாகியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கான வார்டுகளில் தங்களால் போட்டியிட முடியாத சூழலில் கட்சிகளைச் சேர்ந்த ஆண் நிர்வாகிகள், தங்கள் மனைவி அல்லது மகளுக்கு அந்த வார்டின் சீட்டை வாங்கிக் கொடுப்பதை பழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண் வெற்றி பெற்றுவிட்டால், கவுன்சிலர்களைப் போல கணவன்மார்களோ அல்லது தந்தைமார்களோ செயல்படுகிறார்கள். இதுதொடர்பாக பல சர்ச்சைகள் உருவாகிவிட்ட நிலையில், இன்னும் அது முடிவுக்கு வரவில்லை. இந்த விஷயம் தலைநகர் சென்னை மாநகராட்சியிலும் மீண்டும் மீண்டும் எழுகிறது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் மாநகராட்சிக்குக் கூட்டத்துக்கு முன்பாக மண்டலக் குழு கூட்டம் மற்றும் நிலைக்குழுக்கள் கூட்டங்கள் நடைபெற வேண்டும்.

மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு  நிலைக் குழுக்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மாநகராட்சி கூட்டத்தில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும். முக்கியத்துவம் வாய்ந்த மண்டலக் குழு கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி சென்னையில் மண்டலக் குழு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்தக் கூட்டங்களில் மண்டல குழு தலைவர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் தவிர்த்து வேறு யாரும் பங்கேற்க முடியாது. ஆனால், சென்னை மாநகராட்சி மண்டலக் கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் பங்கேற்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த முறை தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்களே பங்கேற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அடாவடியாக செயல்பட்ட காணொளி காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகின. இந்நிலையில் பெண் கவுன்சிலர்களின் உரிமையைப் பறித்து கட்சி நிர்வாகிகளான கணவர்கள் செயல்படுவதும் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த விஷயத்தில் விதிகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்த நிலையில், மீண்டும் அதே சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மண்டலக் குழு கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பங்கேற்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாநகராட்சி எச்சரித்துள்ளது. 

click me!