அதிமுகவை கைப்பற்றும் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் நிறைவேறாது என்று ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்துசென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக அலுவலகம் வந்த ஓ. பன்னீர்செல்வம் வந்தார். அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.
அதிமுக விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமல் பற்றி எரியும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எம்.ஜி.ஆர்,, ஜெயலலிதா ஆகியோர் கோயிலாக கருதிய இடம் அதிமுக தலைமை அலுவலகம். ஆனால், அந்த அலுவலகத்தில் அவர்கள் குடிகாரர்களோடு கும்மாளம் போட்டத்தை பொது மக்கள் அறிவார்கள். எந்த அடியாட்களையும் நாங்கள் அழைத்து வரவில்லை. முன் கூட்டியே திட்டமிட்டு எடப்பாடி ஆதரவாளர்கள்தான் ஆட்களையும், ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தார்கள். காலில் வெறும் பேண்டேஜை சுற்றிக்கொண்டு இபிஎஸ் ஆதரவாளர்கள் நாடகம் ஆடுகின்றனர்.
அதிமுகவை கைப்பற்றும் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் நிறைவேறாது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ. பன்னீர் செல்வம்தான். இன்றைய பொதுக்குழுவில் 700 பேர் மட்டுமே பங்கேற்றார்கள். மனசாட்சி உள்ள அதிமுக உறுப்பினர்கள் பொதுக்குழுவுக்கு செல்லவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் குற்றவாளி என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகத் தெரியும்.” என்று கோவை செல்வராஜ் தெரிவித்தார்.