அதிமுக அலுவலகத்தில் என்ன நடந்தது.? அலுவலகம் யாருக்கு சொந்தம்.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு வருவாய்த் துறை நோட்டீஸ்!

By Asianet Tamil  |  First Published Jul 11, 2022, 10:00 PM IST

அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வருகிற 25.07.2022 அன்று இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜர் ஆக வேண்டும் என்று தமிழக வருவாய்த் துறை ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.


சென்னை வானகரத்தில் இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.‌ அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக அலுவலகம் வந்த ஓ. பன்னீர்செல்வம் வந்தார். அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வருவாய் துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அதில், “இன்று ( 11.07.2022 ) காலை சுமார் 8.30 மணியளவில் E-2 ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒரு பிரிவினர் சென்றபோது. அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு , கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் காவல்துறையினரை பணி செய்யாவிடாமல் தடுத்ததுடன். அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கார்களை சேதப்படுத்தினர். இது தொடர்பாக, பாசறை பாலசந்திரன் என்பவர் 13 நபர்களுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தபோது போலீசார் அவர்களை கைது செய்து காவல்துறையினர் அவ்விடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்திற்கு சீல்..! உள்ளே நுழைந்த வருவாய் துறை அதிகாரிகள்..வெளியேறினார் ஓபிஎஸ்

மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 நபர்களும் , மற்றொரு தரப்பில் 20 நபர்களும் காயமடைந்தனர். மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 நபர்களும், ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர் , காயமடைந்தவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை , ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவேரி மருத்துவனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து E-2 ராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் , ச/ பி 147 , 148 , 341 , 324 , 353 , 336 - ன் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது . சிகிச்சைக்காக E-2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் தொடர்புடைய 14 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு இது தொடர்பாக உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் . கட்சி அலுவலத்தின் உரிமையை கோருவது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் பொது அமைதி பாதிக்கப்பட்டதால் , E - 2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலரிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் , வருவாய் கோட்ட அலுவலர் (தெற்கு / உட்கோட்ட நடுவர், தென் சென்னை ) என்பவர் , முதல் தகவல் அறிக்கை / மற்ற ஆவணங்களை ஆராய்ந்து , சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றினார் ஓபிஎஸ்...! அதிர்ச்சியில் இபிஎஸ்

மேலும் , உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் இப்பிரச்சனை தீவிர சட்டம் & ஒழுங்கு பாதிப்பையும் , பொது அமைதியையும் சீர்குலைத்துவிடும் என்று கருதியதன் அடிப்படையில் இன்று ( 11.07.2022 ) கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வருகின்ற 25.07.2022 அன்று இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜர் ஆக வேண்டும் எனக் கூறி ச / பி 145 - ன் படி இருதரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கினார். இதைதொடர்ந்து வருவாய் கோட்ட அலுவலர் ச / பி 146 ( 1 ) ன்படி பொது அமைதியை காக்கும் பொருட்டு பிரச்சனைக்குரிய கட்டிடத்தை E - 2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பூட்டி சீல் வைத்து போதுமான பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். 

மேலும் , இருதரப்பினரையும் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தேவையான உத்தரவுகளை பெறுமாறும் , மேற்படி சொத்திற்கு பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியரை நியமித்து, வருவாய் கோட்ட அலுவலரின் உத்தரவின்படி செயல்படப் பணித்துள்ளார். மேற்படி பிரச்சனைக்குரிய அலுவலகத்தில் இன்று நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து , சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட கட்சி அலுவலகம் மற்றும் இரு தரப்பைச்சேர்ந்த தலைவர்கள் வீடுகளுக்கு தக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.” என்று செய்திக்குறிப்புல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்க சண்டையில் திமுகவை இழுப்பதா.? அதிமுக அலுவலகம் யாருக்கென நீதிமன்றத்தில் நிரூபியுங்க.. ஆர்.எஸ்.பாரதி கடுகடு!

click me!