சோகத்தில் குடிமகன்கள்.. மீண்டும் தலை தூக்கும் சுண்டகஞ்சி, கள்ளச்சாராயம்.. இதுவரை 324 பேர் அதிரடி கைது..

By Ezhilarasan BabuFirst Published Jun 5, 2021, 9:28 AM IST
Highlights

இதுமட்டுமின்றி சிலர் சோற்றை ஊறவைத்து சுண்டக்கஞ்சி தயாரித்தல், யூடியூப்பை பார்த்து கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

முழு ஊரடங்கில் சட்டவிரோத மதுபானம் விற்ற 324 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. இதனால் கல்வி கூடங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் என அனைத்துமே இயங்க அரசு தடை விதித்துள்ளது. மேலும்  போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டு இருப்பதை பயன்படுத்திக்கொண்ட விஷமிகள் சிலர் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வருகின்றனர். மதுபிரியர்களும் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்தி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்கபட்டும் வருகின்றன. இதுமட்டுமின்றி சிலர் சோற்றை ஊறவைத்து சுண்டக்கஞ்சி தயாரித்தல், யூடியூப்பை பார்த்து கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக வட சென்னை பகுதிகளான ஓட்டேரி, புளியந்தோப்பு, அன்னை சத்யா நகர், வில்லிவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடைப்பெற்று வருவது தெரியவந்து, மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கைது செய்து வருகின்றனர். சென்னையில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் நேற்று வரை சட்ட விரோதமாக மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்ததாக 271 வழக்குகளை சென்னை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்த 321 நபர்களையும் காவல் துறையினர் கைதுச் செய்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள், கள்ளச்சாராயம், சுண்டக்கஞ்சி என மொத்தம் 4,176 லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான பாட்டில்களை கடத்தி செல்ல பயன்படுத்தியதாக 31 வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்த மாதம் 1 ஆம் தேதி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் மொத்தம் 25,461 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 92 வாகனங்கள், 2 ஆம் தேதி சோதனையின் போது மொத்தம் 23,892 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 83 வாகனங்கள், 3 ஆம் தேதி  சோதனையின் போது மொத்தம் 15,262 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டி.ஜி.பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
 

click me!