திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது.. அடங்காத சீமான்.. தாறு மாறு விமர்சனம்..

Published : Sep 01, 2021, 04:57 PM IST
திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது.. அடங்காத சீமான்.. தாறு மாறு விமர்சனம்..

சுருக்கம்

தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, 'திராவிடக்களஞ்சியம்' என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும்.  

சங்கத்தமிழ் இலக்கியங்களை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு: சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு 'திராவிடக் களஞ்சியம்' எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 

தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, 'திராவிடக்களஞ்சியம்' என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும். மனு ஸ்மிருதியிலிருத்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான, 'திராவிடம்' என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. 

சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத 'திராவிடம்' எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது. ஆகவே, சங்கத்தமிழ் இலக்கியங்களை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை, 'தமிழ்க்களஞ்சியம்' என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். என அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!