உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புக்கு திராவிட மாடல் ஆட்சி முக்கியத்துவம் கொடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புக்கு திராவிட மாடல் ஆட்சி முக்கியத்துவம் கொடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் தோள்சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உஎரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக தோள்சீலை போராட்டம் உள்ளது. இதுபோன்ற வீரமிகுந்த போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மதத்தின் பேரால் - சாதியின் பேரால் - சாத்திர சம்பிரதாயங்களின் பேரால் - புராணங்களின் பேரால் - மனிதரை மனிதர் பாகுபடுத்திவிட்டார்கள். ஆணுக்குப் பெண் அடிமை என்றாக்கி விட்டார்கள். சூத்திரர்களையும் பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. தீண்டாமையை புனிதம் ஆக்கினார்கள். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது – நேரில் வரக்கூடாது - படிக்கக் கூடாது என்று ஆக்கினார்கள். பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள்.
இதையும் படிங்க: பாஜகவில் விழுந்த அடுத்த விக்கெட்... ஐடி விங் செயலாளர் திடீர் ராஜினாமா!!
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று ஆக்கினார்கள். இதற்கு எதிராக அருட்பிரகாச வள்ளலாரும், வைகுண்டரும், அயோத்திதாச பண்டிதரும், பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியாரும் நடத்திய சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு தலைநிமிர வைத்திருக்கிறது. பக்தி வேறு - பாகுபாடு வேறு என்பதை உணர்த்தியவர்கள் இந்தத் தலைவர்கள். உலகம் நாகரிகம் அடைவதற்கு முன்னதாகவே ஆடை அணிந்து வாழ்ந்தது மட்டுமல்ல, அணிகலன்களும் அணிந்து வாழ்ந்து வந்திருக்கக்கூடிய இனம்தான் நம்முடைய தமிழினம். அதனைத்தான் நமக்கு கீழடி காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழினத்தினுடைய பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களை தொட்டுவிட்டது. 80 வயதை கடந்த பெரியவர்களை கேட்டால்தான் இந்த தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் தெரியும். தமிழ்ச் சமுதாயமானது 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.
இதையும் படிங்க: திருமாவளவனின் இந்த செயல் வருத்தமளிக்கிறது... அறிக்கை வெளியிட்ட மதிமுக!!
ஆடை மட்டுமின்றி அணிகலன்களையும் அணிந்து வாழ்ந்து வந்ததுதான் நமது தமிழ்ச் சமுதாயம். இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது. மதம், சாதி, புராணம், சாஸ்திர சம்பிரதாயங்களால் பல மாற்றங்கள் நிகழ்ந்து ஆணுக்கு பெண் அடிமை என மாற்றிவிட்டனர். திருவிதாங்கூரில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் வேறு எங்கும் நடைபெறாதது. தோள்சீலை போராட்டத்துக்கு அய்யா வைகுண்டர் துணையாக இருந்தார். இன்றைய திராவிட மாடல் ஆட்சி, உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாம் எல்லோரும் முன்னேற்றம் அடைவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் எதிர்க்கிறார்கள். படிக்க வரும் பெண் பிள்ளைகளுக்கு ரூ.1000 கொடுப்பதால் சிலர் பொறாமைப்பட்டு எதிர்க்கிறார்கள். சமூக அழுக்குகளை சட்டம், மன மாற்றத்தால் மாற்றி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.