
அதிமுக கோட்டையான திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கடந்த 2019-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, எம்.எல்.ஏ-வாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர் டாக்டர் சரவணன்.
மதுரையில் பிரபலமான சரவணா மருத்துவமனையின் தலைவரான இவர், ஆரம்பத்தில் மு.க.அழகிரி ஆதரவாளராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர் பிறகு மதிமுக-வில் இணைந்தார்.
மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக சில காலம் மதிமுக-வில் பயணித்துவிட்டு, 2015-ல் பாஜகவில் சேர்ந்தார். அங்கும் சூழல் சரியில்லாததால் 2016-ல் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். மருத்துவ அணி மாநில துணச் செயலாளாரக பொறுப்பு வழங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டதால், 2017-ல் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.
அந்தத் தேர்தலின்போதுதான் அதிமுக வேட்பாளரின் சான்றிதழில் ஜெயலலிதா வைத்த கைரேகை சர்ச்சையானது. அதை நீதிமன்றம் வரை கொண்டு சென்று ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏகே.போஸ் மரணமடைய 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வெற்றி பெற்றார் சரவணன். திருப்பரங்குன்றம் தொகுதியை ஆளும் அரசு புறக்கணித்ததால் இவர் சொந்தப் பணத்தை செலவு செய்து நலத்திட்டங்களை செய்தார்.
இந்தநிலையில், இவருக்கும் மதுரை மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்திக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டதால், கடந்த தேர்தலில் சரவணனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாதென்று கட்சி சீனியர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு அப்போது எழுந்தது.
இதனையடுத்து திமுக கூட்டணியில் திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம்-க்கு ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வந்தவுடன் அதிர்ச்சியானார். திருப்பரங்குன்றம் இல்லாவிட்டால் சிட்டிங் எம்.எல்.ஏ-வான தனக்கு மதுரை மாவட்டத்தில் வேறு தொகுதி ஒதுக்குவார்கள் என்று நம்பியிருந்தார் சரவணன். ஆனால், திமுக வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே சென்னை கிளம்பி ஸ்டாலினைச் சந்திக்க முயற்சித்தார். ஸ்டாலின் பார்க்க மறுத்துவிட்டார்.
அதனால் ஆத்திரமடைந்த சரவணன் பாஜக-வினரோடு பேச ஆரம்பித்தார். இவருக்குள்ள செல்வாக்கு, பண பலம் போன்றவற்றை அறிந்திருந்த பாஜக தலைமை இணைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டது. ஆனால், சரவணனோ மதுரையில் வடக்குத் தொகுதியை கொடுத்தால்தான் இணைவேன் என்று சொல்ல, மதுரை வடக்கு தொகுதிக்கு நல்ல வேட்பாளரை தேடிக்கொண்டிருந்த பாஜக தலைமை, இதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டது. அதோடுதான் அப்போதைய மாநில தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான முருகன் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். அதைத் தொடர்ந்து அவரை வேட்பாளராகவும் பாஜக தலைமை முறையாக அறிவித்தும்விட்டது.
சட்டமன்றத்தேர்தலின் போது, கடைசி நேரத்தில் தாமரை கட்சிக்கு தாவி, உடனே மதுரையில் தேர்தல் சீட்டும் வாங்கி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டு, தனது ஆதரவாளர்களை பக்கத்தில் அமர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. கட்சியின் விதிக்கு முரணாக தலா ஆறு பொதுச்செயலாளர்கள், துணைச் செயலாளர்களை அவர் நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே அவரின் தீவிர ஆதரவாளர்கள் என்கிறார்கள். கட்சி விதிகளின் படி ஒரு பொதுச்செயலாளர், 3 துணைத்தலைவர்கள்தான் நியமிக்க வேண்டும். இவரின் அத்துமீறிய நடவடிக்கையை கண்டு, மதுரையில் ஆரம்ப காலத்தில் இருந்து கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் கொந்தளிப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.
கட்சி மேலிடத்திற்கு தகவல் கொடுத்தும், மாநில தலைமை இவருக்கு ஆதரவாக செயல்படுவதால், கட்சியின் மூத்த பிரமுகர் கொதிப்பில் வலம் வருகிறார்களாம். ஏற்கனவே மதுரையில் பாஜக 4 அணியாக உள்ளது. தற்போதைய தலைவர் நடவடிக்கையால், 5வது அணியாக உருவாகியுள்ளது. தாமரையின் 5 இதழ்கள் உருவாகி பிரிந்துள்ளது.