மீண்டும் கட்சியில் சேர்க்காவிட்டால் அதிமுகவின் அந்தரங்கங்களை வெளியிடுவேன்... மாஜி எம்.பி., மனக்குமுறல்..!

By Thiraviaraj RM  |  First Published Jan 25, 2022, 6:13 PM IST

நான் தற்போது அமைதியாக இருக்க வேண்டிய காலகட்டம் எனவே அமைதியாக இருக்கிறேன்


அதிமுகவில் இருந்து கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகவும் கட்சி கட்டுப்பாட்டை மீறிதாகவும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை அக்கட்சியின் தலைமை கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி நீக்கியது. இதனையடுத்து அவ்வப்போது எம்ஜிஆர் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் சமயங்களில் வால்போஸ்டர் மூலம் தனது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார் அன்வர்ராஜா.

'’என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும், எங்கு பேசவேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என ஒரு நியதி உண்டு.  நான் தற்போது அமைதியாக இருக்க வேண்டிய காலகட்டம் எனவே அமைதியாக இருக்கிறேன். மேலும், என்னுடைய நிலைப்பாடு குறித்து எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி எனது சார்பாக ஒட்டியுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிட்டுள்ளேன். அதில் இந்தப் பிறவிக்கு பிறகு எனக்கு இன்னொரு பிறவி இருக்கிறது என்றால் அதிலும் எம்ஜிஆர் தான் எனக்கு தலைவராக வரவேண்டும். அவரை தவிர நான் யாரையும் மானசீகமாக நேசிக்கவில்லை. அவருக்கு நிகரான தலைவர் வேறு யாரும் இல்லை’’ என தெரிவித்து இருந்தார்.  

Latest Videos

எனக்கென்று தனியாக யாரும் ஆதரவாளர்கள் இல்லை, அதிமுக தொண்டர்கள் தான் எனது ஆதரவாளர்கள். நான் இன்னும் அண்ணா திமுகவில் தான் இருக்கிறேன். தற்காலிகமாக என்னை விலக்கி வைத்திருக்கிறார்கள். அண்ணா திமுக ஒரு கட்டுப்பாட்டுக்கு பெயர்போன கட்சி. மீண்டும் கட்சியில் சேருவதற்காக நான் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. எங்கள் தலைவர்கள் நினைத்தால் நேரம் வரும்போது என்னை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இதுவரை யாரும் என்னை கட்சி தலைமையிலிருந்து தொடர்பு கொள்ளவில்லை தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை அதிமுகவின் பிரமுகர் என்றே சொல்லி வருகிறார். தன் ஆதரவாளர்களிடம் விரைவில் தலைமையிடமிருந்து தன்னை கட்சியில் சேர்க்கும் அறிவிப்பு வருமென ஆணித்தரமாக கூறி வந்தார். ஆனால், மீண்டும் இணைப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் கடும் விரக்தியில் இருக்கிறார். தனது அனுபவத்தை அதிமுக தலைமை அலட்சியப்படுத்துகிறதா? விரைவில் இதற்கு பதில் சொல்லும் நிலை வரும் என புலம்பி வருகிறார். தென்றல் விரைவில் புயலாக மாறலாம். தன்னை மதித்து கட்சியில் சேர்க்காவிட்டால், பல அந்தரங்க விஷயங்களை நான் வெளியிட வேண்டி வரும். அது ராயப்பேட்டைக்கு நல்லது கிடையாது. வேறு கட்சிக்கு போனால் ராயப்பேட்டை இரட்டை தலைமையும், ஒற்றை தலைமையாக, புது தலைமை ஒன்றை உருவாக்கும் முயற்சியை செய்வேன் என்று சபதம் வேறு எடுத்து இருப்பதாக அவரது அடிப்பொடிகள் பேசிக்கொள்கிறார்கள்.  ஆனால், அன்வர் ராஜா எது உண்மை, எது கற்பனை, எது பொய் என்று சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.

click me!