சட்டத்தைத் திருத்தினால்தான் அதற்கு வழி பிறக்கும்... மோடி, எடப்பாடி அரசுகளுக்கு ராமதாஸ் வைத்த அதிரடி கோரிக்கை.!

By Asianet TamilFirst Published Sep 2, 2020, 7:50 PM IST
Highlights

அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலம் பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் அரசுத்துறை பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பதவி உயர்வுக்கு ஏற்பட்டுள்ள பெரும் தடையை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படவில்லை. ஆனாலும், தமிழ்நாட்டில் அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் மறைமுகமாக இட ஒதுக்கீடு வழங்கும் முறை 2003-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த நடைமுறை செல்லாது என்று கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது; அதை 2016-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டில் சில திருத்தங்களை செய்த தமிழக அரசு, 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளை சேர்த்தது.
இந்த பிரிவுகளின் படி தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அந்தச் சட்டத் திருத்தமும் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தன. அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது முற்றிலுமாகத் தடைபடும். இதனால், தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் 2 லட்சத்துக்கும் கூடுதலான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பாதிக்கப்படுவர். இது மோசமான சமூக அநீதி.


உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் வேண்டுமானால் சரியானவையாக இருக்கலாம். ஆனால், தார்மீக நெறிமுறைகளின் அடிப்படையிலும், சமூகநீதியின்படியும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் பதவி உயர்வு வழங்க அரசியல் சட்டத்தில் வகை செய்யப்படவில்லை; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தேவைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, தானாக வழங்கப்பட்டு விடக் கூடாது ஆகிய இரு அம்சங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
ஆனால், பணி நியமனங்களில் மட்டுமின்றி பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சமூகநீதியின் அடிப்படை. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்த நிலை பணியில் சேர்ந்தனரோ, அதே நிலை பணியிலேயே ஓய்வு பெறுவது எந்த வகையில் சமூகநீதியாக இருக்க முடியும்? மத்திய அரசு பணிகளை எடுத்துக் கொண்டால், ஏ மற்றும் பி பிரிவு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் 2 அல்லது 3 விழுக்காட்டைத் தாண்டவில்லை. தமிழக அரசுப் பணிகளிலும்கூட கிட்டத்தட்ட இதே நிலைதான் காணப்படுகிறது. இதற்கு காரணம் பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதுதான்.
மத்திய, மாநில அரசுகளின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற ஒற்றை அம்சத்தின் அடிப்படையிலேயே பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும். மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதே போன்று அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலம் பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளின் பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

click me!