பஞ்சமி நில விவகாரம்... ஆணையத்துக்கே மிரட்டல் விடுப்பதா..? திமுகவுக்கு டாக்டர் ராமதாஸ் பதிலடி!

By Asianet TamilFirst Published Nov 19, 2019, 10:10 PM IST
Highlights

முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைத்தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அதுதான் அறம். அதுதான் நேர்மை!
 

முரசொலி நிலம் விவகாரத்தில் ஆவணங்களைக் காட்டாமல், மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை திமுக செய்திருக்கிறது என்று பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்ட ட்வீட்டை வைத்து தமிழக பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி விசாரணைக்கு ஆஜராகக் கோரி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதை ஏற்று முரசொலி அறங்காவலர் என்ற அடிப்படையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி நேரில் ஆஜரானார். 
அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இந்தப் புகார் அரசியல்  ரீதியானது என்றும், இதுபோன்ற புகாரை விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது என்றும், நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்க முடியும் என்று நீண்ட விளக்கத்தை அளித்தது.


மேலும் முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று பொய் புகார் கூறுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம். இந்த விவகாரத்தைத் தொடங்கி வைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது வழக்குத் தொடர உள்ளதாகவும் திமுக தெரிவித்துள்ளது. திமுகவின் இந்த நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்வீட்டர் பதிவில் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதில்,  “முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைத்தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அதுதான் அறம். அதுதான் நேர்மை!


முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!