
மு.க.ஸ்டாலின் நாக்கில் சனி இருக்குமோ? விஷம் இருக்குமோ? என சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தருமபுரி மக்களவை தொகுதியில் அன்புமணி ராமதாஸை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், "அதிமுக ஆட்சியை கலைக்கும் நோக்கில் திமுக உள்ளது. இதையே அவங்க பாஷையில் சொல்லனும்னா இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைச்சு கூட பார்க்க முடியாது. ஸ்டாலின் என்னை பற்றி தாறுமாறாக பேசுகிறார். முதல்ல விவசாயத்தை பத்தி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? நாங்கள் விவசாயிகள் நான் ஒரு விவசாயி, தைலாபுரத்தில் விவசாயம் செய்கிறேன்.
முதல்வரும் ஒரு விவசாயி. என் தோட்டத்து விவசாயத்தை என் மனைவியும், அதேபோல முதல்வரின் மனைவியும் விவசாயத்தை பார்த்து கொள்கிறார்கள். அதனால் நாங்கள் அடிப்படையிலேயே விவசாயிகள். நான் அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவரது நாக்கில் சனி இருக்குமோ? விஷம் இருக்குமோ? என்று சந்தேகங்கள் எழுகிறது. அவர் துணை முதல்வராவதற்கு காரணமே நான்தான்.
கருணாநிதியிடம் போய் ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தாருங்கள் என்று சொன்னேன். ஆனால் துணை முதல்வராக இருந்து ஒரு சாதனையும் செய்யவில்லை. ஒரேநாளில் 16 மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது அன்புமணி ராமதாஸ். ஆனால், அதைக்கூட நான் தான் கொண்டு வந்தேன் என பொய் பேசுகிறார். இதே தருமபுரியில் மருத்துவக் கல்லூரி வருவதற்கு காரணம் அன்புமணி ராமதாஸ்தான்.
அதனால இங்கே எதிர்த்து நிற்பவரை பற்றி ஒன்னே ஒன்னு சொல்லணும்னா அது "ஐயோ பாவம்"தான், திமுக என்ற கட்சியே இனி தமிழகத்திற்கு தேவையில்லை. யாராவது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க நினைத்தால் அவர்களை இங்கு கூடியிருக்கும் பெண்கள் தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்டத்தில் மாம்பழம் அதிகமாக விளைகிறது. இது மாம்பழ சீசன் வேறு. வாக்காளர்கள் அனைவரும் வெற்றியின் சின்னமான மாம்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் தான் மாம்பழம் அதிக வாக்குகள் வாங்கியது என்ற செய்தி வெளியே வரவேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.