
ட்ரெண்டிங் ஆக வேண்டும் என்பதற்காக நடிகை சித்ரா மரணம் தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்றும் அது காவல்துறையிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகை சித்ரா மரணம் தொடர்பாக பல்வேறு அதிரி புதிரி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஜெயக்குமார் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
சீரியல் நடிகை சித்ரா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது, அது கொலையா தற்கொலையா என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. சித்ரா மரணம் தொடர்பாக அவரது காதலன் பல்வேறு புகார்களை கூறிவருகிறார். சித்ராவுக்கு அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு இருந்ததாகவும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் சித்ரா உடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறார். ஆனால் அந்த அமைச்சர் யார் என்பது வெளிப்படையாக தெரியவில்லை, இந்நிலையில் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று கையெழுத்திட ஆஜரானார். அதாவது ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஆஜராகி கையெழுத்திட்டு வந்த நிலையில் பிரதி வாரம் ஆஜராக இயலாத நிலை இருப்பதாகவும்
எனவே தனக்கான நிபந்தனையை தளர்த்த வேண்டும் என அவர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாதம் இருமுறை ஆஜராகி கையெழுத்து இடுமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாதம் இரு முறை ஆஜராகி வருகிறார். இந்நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் அவர் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் படிப்படியாக திமுக அரசு நிறுத்தி வருகிறது. இதுதான் திராவிட மாடலின் நோக்கம் என அவர் கூறினார். சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சித்ரா மரணம் தொடர்பான கேள்விகள் காவல்துறையிடம் கேட்க வேண்டிய கேள்விகள்.
ஆனால் அதை தவிர்த்து தம்மிடம் இதைப்பற்றி கேட்கக்கூடாது, தான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்தே இப்போது ஊடகங்கள் வியாபாரம் செய்ய வேண்டாம் என அவர் கூறினார். அதிமுக ஆட்சியில் இருந்தவரை நாட்டிலேயே சட்டம்-ஒழுங்கை காப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் சட்டவிதிகள் 17 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுக என்பது பொற்கால ஆட்சி, திமுக கற்கால ஆட்சியாக இருந்து வருகிறது என்றார். தமிழ்நாட்டில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை என கூறிய அவர், அதிமுக அரசு ஹீரோவாக செயல்பட்டது திமுக அரசு ஜீரோவாக செயல்படுகிறது என்றார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இது எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார். அதேபோல் அதிமுகவில் சசிகலா இணைப்பு என்பது எடுபடாத விஷயம் என குறிப்பிட்ட அவர் இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்றார். இணைப்பு குறித்த சசிகலா கருத்துக்களைக் கேட்டு கேட்டு புளித்துவிட்டது என்று கூறினார்.