நெருப்புடன் விளையாடாதீர்கள்... பாஜகவுக்கு எதிராக கெத்துக்காட்டும் வங்கப்பெண்புலி மம்தா..!

By Thiraviaraj RMFirst Published Dec 26, 2019, 5:32 PM IST
Highlights

நெருப்புடன் விளையாட வேண்டாம் என நான் பாஜகவை எச்சரிக்கிறேன் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். 
 

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து மேற்கு வங்காளத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேரணி நடத்தி வருகிறார். அவ்வகையில் இன்றும் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

பேரணியின்போது பேசிய மம்தா, புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை அமைதியான போராட்டங்கள் தொடரும் என கூறினார். “மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைக்காக ஜனநாயக வழியில் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கிறேன். யாருக்கும் பயப்படாதீர்கள். 

நெருப்புடன் விளையாட வேண்டாம் என நான் பாஜகவை எச்சரிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசும் மாணவர்களை பாஜக மிரட்டுகிறது.  கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.” என்றார் மம்தா.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவருமே குற்றப் பின்னணி கொண்டவர்கள், அவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கர்நாடக மாநில போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார்.

click me!