எம்.பியாக இருந்து கொண்டு வன்முறை செய்யலாமா...?? அன்புமணியை கிழிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2019, 4:33 PM IST
Highlights

பாமகவினர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களை கொலை மிரட்டல் விடுத்ததோடு,  அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

பத்திரிக்கை அலுவலகத்திற்குள் நுழைந்து பாமகவினர் தாக்குதல் நடத்திய செயலுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது அதன் முழு விவரம் பின்வருமாறு :- பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மிகக் குறைவான அளவில் 15 சதவிகிதம் மட்டுமே வருகை தந்துள்ளார் என்றும், குடியுரிமை சட்டத் திருத்த சட்ட முன்வடிவின் மீதான விவாதத்தில் கலந்து கொள்ளாமல், வாக்கெடுப்பின் போது மட்டும் கலந்து கொண்டார் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டது.  

இச்செய்தியை பொறுத்துக் கொள்ளாமல் ஆத்திரமடைந்த பாமகவினர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களை கொலை மிரட்டல் விடுத்ததோடு,  அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.  பாமகவினரின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள், உறுப்பினர்கள் வருகைப் பதிவு, ஆற்றிய உரைகள், கேட்ட கேள்விகள், முன்மொழிந்த தீர்மானங்கள் - சட்ட முன்வடிவுகள் ஆகியவற்றைத் தொகுத்து பல்வேறு இதழ்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும்.  

அதன் அடிப்படையிலேயே அன்புமணி ராமதாஸ் 15 சதவிகிதம் அளவில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இதில் தவறு இருந்தால், செய்தி வெளியிட்ட பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எத்தனை நாள் கூட்டத்தில் பங்கேற்றார் - எத்தனை முறை உரையாற்றினார், எத்தனை கேள்விகளை எழுப்பினார் என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி மறுப்பு செய்தி வெளியிடச் சொல்வது தான் ஜனநாயக நடவடிக்கையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

click me!