இந்தியாவைப் பற்றி பேச உங்களுக்கு தகுதியில்ல.. அமெரிக்காவுக்கு எதிராக அருவா தூக்கிய அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Nov 22, 2021, 2:39 PM IST
Highlights

நியூயார்க் நகரில்தான் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. அமெரிக்கா இதை கூறுவதற்கு முன்னால் யோசிக்க வேண்டும்.  கண்ணாடி கூண்டில் இருந்துக் கொண்டு கல் வீசக்கூடாது,

அமெரிக்கா கண்ணாடி கூண்டில் நின்று கல்லெடுத்து வீசக் கூடாது என்றும், அமெரிக்கப் பெண்கள் இந்தியாவுக்கு தனியாக சுற்றுப்பயணம் வரக்கூடாது என சொல்வதற்கு அந்த நாட்டிற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லை என்றும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். நியூயார்க் நகரத்தில்தான் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மோடி பதவியேற்ற முதல் பல்வேறு நாடுகளுடனான உறவுகளில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் மோடி அதிக நெருக்கம் காட்டினார். அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்களை திரட்டி நடத்தப்பட்ட மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் ஒரு சேர கைகோர்த்து வலம் வந்தது பல்வேறு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் ஜோ பிடன் அதிபராகியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அதிப்ர பிடன், துணை அதிபர் கமலா ஹாரிசனை சந்தித்து அளவளாவினார். கமலாஹாரிசனை இந்தியா வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்குமான உறவு வலுப்பெற்று வரும் நிலையில், சமீபத்தில் அமெரிக்கா வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்கப் பெண்கள் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளதான் அது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொடூரமான பாலியல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் இந்தியாவை நிலைகுலையச் செய்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் நட்பு பாராட்டி வரும் நிலையில் இந்தியாவை அவமானப்படுத்தும் வகையில் இப்படி ஒரு கருத்தை அமெரிக்கா கூறியிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக அரசியல் நோக்ககர்கள்  ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் தளத்தில் அமெரிக்காவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக இளைஞர், மகளிர் அணியினர் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார், அக்காட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கராத்தே தியாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடையை நடத்துவதில் மட்டுமே அக்கறை இருக்கிறது, அந்த அக்களை மக்கள் மீது இல்லை என விமர்சித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போராட்டம் மாநில அரசுக்கு எதிராக, குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம். இப்போது குறையவில்லை என்றால் அவர்கள் தேர்தலின் போது பேசிய பேச்சுக்கும், அதை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

தேர்தல் வாக்குறுதி கூறாத பிற மாநிலங்கள்கூட பெட்ரோல் விலையை குறைத்துள்ளது. அல்லது பொய் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தோம் என்பதை திமுக ஒப்புக்கொள்ளட்டும், நாங்கள் போராட்டம் நடத்துவதை நிறுத்திக் கொள்கிறோம் என அண்ணாமலை கூறினார். அப்போது அமெரிக்க பெண்கள் இந்தியாவிற்கு தனியாக சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவித்துள்ளதே என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதைப் பற்றி பேச அமெரிக்காவுக்கு கொஞ்சம் கூட தகுதி கிடையாது. நியூயார்க் நகரில்தான் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. அமெரிக்கா இதை கூறுவதற்கு முன்னால் யோசிக்க வேண்டும்.  கண்ணாடி கூண்டில் இருந்துக் கொண்டு கல் வீசக்கூடாது, இந்தியாவிற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக அவர்கள் இப்படி கூறுகின்றனர். பெண் தெய்வங்கள் அதிக அளவில் உள்ள நாடு இந்தியாதான். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது ஆனால் அதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
 

click me!