நேற்று முதல்வரை கண்டித்து வீடியோ வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இன்று நடந்த அரசு விழாவில் முதல்வரை பாராட்டி வாழ்த்துரை நிகழ்த்தியது கோவையில் ‘சலசலப்பை’ உண்டாக்கி இருக்கிறது.
கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவை கோவையை சேர்ந்த 9 எம்.எல்.ஏக்களும் புறக்கணித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க கோவை வருகை தந்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். கோவை மற்றும் திருப்பூரில் நலத்திட்டங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து என இன்றும்,நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
undefined
கோவை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப் பணிகளை பயனாளிகளுக்கு துவங்கிவைத்தல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள், கோவை வ. உ. சி. மைதானத்தில் நடைபெற்றன. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த அரசு விழாவை கோவையை சேர்ந்த 9 எம்.எல்.ஏக்களும் புறக்கணித்து உள்ளது, சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. 9 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா ஒரு இடம் என்று 10 இடங்களையும் தனதாக்கி உள்ளது.இந்நிலையில் முதல்வர் இன்று பங்கேற்கும் ‘அரசு’ விழாவினை பாஜக வானதி சீனிவாசனை தவிர மற்ற 9 எம்.எல்.ஏக்களும் புறக்கணித்து இருக்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்ட வானதி சீனிவாசன், விழாவுக்கு வந்திருந்தார்.அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை மேடைக்கு கீழ் இருக்க, அவரை மேடையில் அமர வைத்தார் முதல்வர் ஸ்டாலின். விழாவுக்கு வாழ்த்துரை வழங்கி பேசினார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
முதல்வர் ஸ்டாலின் கோவை வருகையை ஒட்டி, ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் விழா புறக்கணிப்பு குறித்து கோவை தெற்கின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒரு காணொளியை நேற்று இரவு வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் போட்டியிட்ட திமுகவினர் ஒரு இடத்தில கூட வெற்றிபெறவில்லை. திமுக அரசு கோவை மாவட்டத்தை முற்றிலும் புறக்கணித்து வருகிறது.இது கண்டிக்கத்தக்கது. திருச்சி தேசியநெடுஞ்சாலை பகுதியை உடைத்து மழைநீர் சாக்கடையோடு கலந்து கோவை தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று மாதங்களாக அரசு நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் பயனில்லை. இது தான் ‘ஸ்மார்ட்’ சிட்டியின் நிலைமை.மாநகர் முழுவதும் குப்பைகள் கிடக்கின்றன.ஆளுங்கட்சி கண்ணசைத்தால் மட்டுமே எதுவும் நடக்கிறது.பத்து தொகுதிகளிலும் தோற்ற திமுக மக்களை பழிவாங்குகிறது’ என்று கூறி உள்ளார்.
முதல்வரை கண்டித்து நேற்று இரவு இப்படியொரு வீடியோவை வெளியிட்டுவிட்டு, முதல்வர் பங்கேற்கும் அதே அரசு விழாவில் கலந்து கொண்டது திமுக, பாஜகவை மட்டுமல்ல அதிமுகவினரிடையேயும் ‘அதிர்ச்சி’யை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதிக்கு மேடைக்கு கீழே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின், அவரை மேடைக்கு வர சொல்லி இருக்கை வசதி செய்து தர சொன்னார்.இதுவும்,வானதி முதல்வரை பாராட்டி வாழ்த்துரை வழங்கியதும் அரசியல் வட்டாரத்தில் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சிக்காரர்கள் அதிர்ச்சியில் இருக்க, “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா….! “ என்கின்றனர் கோவைவாசிகள்.