எங்களுக்கு உதவி வேண்டாம்.. நீதி தான் வேண்டும்.. ரஜினியிடம் உருகிய ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பம்..!

By Selva KathirFirst Published Jun 29, 2020, 6:14 PM IST
Highlights

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் மிக கடுமையாக தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் நடிகர் ரஜினி பேச ஐடியா கொடுத்தது கமல் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் மிக கடுமையாக தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் நடிகர் ரஜினி பேச ஐடியா கொடுத்தது கமல் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று நடிகர் ஜெயம் ரவி முதல் பாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா வரை குரல் கொடுத்தனர். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஷிகர் தவானும் இந்த விஷயத்தில் ட்வீட் செய்ததால் விவகாரம் அகில இந்திய அளவில் பேசப்பட்டது. பிரியங்கா சோப்ரா போன்றோரால் கோவில்பட்டி படுகொலை உலக அரங்கில் விவாதிக்கப்பட்டது. ஆனால் தமிழக போலீசாரை எப்போதும் உயர்வாக பேசி வரும் நடிகர் ரஜினி இந்த விஷயத்தில் மவுனம் காத்து வந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது கூட ரஜினி போலீசுக்கு ஆதரவாகவே பேசியிருந்தார்.

இதே போல் ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை சும்மாவிடக்கூடாது என்று யாரும் கேட்காமலேயே ரஜினி தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதனை எல்லாம் சுட்டிக்காட்டி ஜெயராஜ் – பென்னிக்ஸ் விவகாரத்தில் ரஜினி ஏன் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். குறிப்பாக திமுக ஆதரவாளர்கள் ரஜினியை டேக் செய்தும், கிண்டல் செய்தும் இந்த விவகாரத்தை ட்விட்டரில் பெரிதாக்கி வந்தனர். ரஜினி அமைதியாக இருந்த காரணத்தினால் இந்த விஷயத்தில் ரஜினி ரசிகர்களும் அமைதியாகவே இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென நேற்று சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஒரு ட்வீட் போட்டார். அதில், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை ரஜினி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக கூறியிருந்தார். இந்த தகவல் உடனடியாக பிரேக்கிங் செய்தியானது. ரஜினி தரப்பில் விசாரித்த போது, அவர்களும் ரஜினி சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் பேசியதை உறுதிப்படுத்தினர். சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு ரஜினி இந்த விஷயத்தில் தலையிட்டது ஏன் என்கிற கேள்வி எழுந்தது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு கொந்தளிப்பான சூழல் நிலவிய நிலையிலும் ரஜினி அமைதியாக இருந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை திடீரென ரஜினி ஏன் அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசினார் என்பது தான் பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ரஜினி கடந்த சனிக்கிழமை யே முடிவு செய்துவிட்டதாக சொல்கிறார்கள். தனது தூத்துக்குடி மாவட்ட மன்ற நிர்வாகிகளை நேரடியாக ஜெயராஜ் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாமா என ரஜினி யோசித்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் அங்கு ஏற்கனவே திமுக நிர்வாகிகள் குடும்பத்தோடு குடியிருப்பதால் அது சரியாக இருக்காது என்று ரஜினியே முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று காலை நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு அறிக்கைவெளியிடப்பட்டது. அதில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளதாகவும் அப்போது நடிகர் கமல் தொலைபேசி வாயிலாக அவர்களிடம் இரங்கல் தெரிவிப்பார் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. இந்த தகவல் உடனடியாக ரஜினி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

உடனடியாக ரஜினி நான் ஏன் தற்போதே அவர்களிடம் பேசக்கூடாது என்று கேட்க, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மூலம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரின் செல்போன எண் பெறப்பட்டது. ரஜினி தனது செல்போனில் இருந்து நேரடியாக ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் பேசியுள்ளார். மேலும் இது தான் தனது செல்போன் எண், எந்த உதவி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள் என்று ரஜினி கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜெயராஜ் குடும்பத்தார், உதவி என்பதை விட எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று ரஜினியிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு ரஜினியும் தன்னால் முடிந்ததை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

click me!