எல்லாவற்றையும் அதிமுகவிடம் வாங்கிக்கொண்டு திமுக வெற்றிக்கு உதவுகிறதா பாமக..? கடும் அப்செட்டில் எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Sep 22, 2021, 2:14 PM IST
Highlights

பாமகவின் வரலாறை ஆராய்ந்தால் தேர்தல் எக்கட்சி வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே அறிந்து அக்கட்சி மீது சவாரி செய்து வெற்றிக்கனிகளை ஈட்டி வந்தது அக்கட்சி. 

அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்கிறோம் எனக் கூறி கூட்டணிக்குள் அணுகுண்டை போட்டுள்ளது. அதிமுகவுடனேயே பாமக கூட்டணியை தொடரும் என நம்பியதால் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து அழகு பார்த்தது அதிமுக தலைமை. ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் ’தனித்து’என்கிற முடிவை அறிவித்துள்ளார் ராமதாஸ். 

பாமகவின் வரலாறை ஆராய்ந்தால் தேர்தல் எக்கட்சி வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே அறிந்து அக்கட்சி மீது சவாரி செய்து வெற்றிக்கனிகளை ஈட்டி வந்தது அக்கட்சி. அதன்படி, 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனும், 1999 மக்களவைத் தேர்தலில் திமுகவுடனும், 2001 சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவுடனும்,  2004 மக்களவைத் தேர்தலில் திமுக,வுடனும், 2006 சட்டப்பேரவைத் தேர்தல் மீண்டும் திமுகவுடனும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று தாங்கள் பலமான கட்சி என பறைசாற்றிக் கொண்டது பாமக. 

ஆனால், 2009க்கு பிறகு வந்த தேர்தல்கள் பாமகவின் பலத்தை புட்டுப்புட்டு வைத்தது. 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடனும், 2014 மக்களவைத் தேர்தல் பாஜகவுடனும்,  2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தும்  2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனும்,  2021 சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுகவுடனும் கூட்டணி அமைத்தும் ராமதாஸிய்ன் வியூகங்கள் எடுபடவில்லை. மாற்றம் பின்னேற்றம் ஆனதுதான் மிகுந்தது. 

2011-ல், “திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே இல்லை” என அறிவித்துவிட்டு, 2019-ல் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தபோதே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது பாமக. அதுவும் அதிமுக மீது ஊழல் புகார்களை வாசித்துவிட்டு, கூட்டணி சேர்ந்த பாமகவின் பிம்பம் பொதுவெளியில் சேதாரமானது. எனினும், விமர்சனங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல்தான் அதிமுக கூட்டணியிலேயே பாமக நீடித்தது.

இக்கூட்டணியில் வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்காத முக்கியத்துவம் பாமகவுக்குக் கிடைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியைத் தேமுதிக உதறியபோதும்கூட, பாமக இருக்கிறதே என்று தெம்பாக இருந்தது அதிமுக. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகும்கூட பாமக விஷயத்தில் அதிமுக தலைமை மிகுந்த அனுசரணையாகவே இருந்தது. அதிமுகவைச் சீண்டிய அன்புமணிக்குப் பதிலடி தந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, பெங்களூரு புகழேந்தி அதிமுகவிலிருந்து தூக்கியெறியப்பட்டது ஓர் உதாரணம்.

இதற்கெல்லாம் காரணம், ஆளுங்கட்சியான திமுகவை உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்க கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டியது அவசியம் என்று அதிமுக தலைமை கருதியதுதான். ஆனால், தேர்தலுக்குப் பிறகு வழக்கம்போல் அதிமுகவிடமிருந்து ஒதுங்கியே இருந்தது பாமக. பேரவைச் செயல்பாடுகளில் அதிமுகவுடன் பாமக இணக்கமாகவும் இருக்கவில்லை. இதை எடப்பாடி பழனிசாமியே சில சந்தர்ப்பங்களில் ராமதாஸுக்கு சுட்டிக்காட்டியதாகவும், அதை ராமதாஸ் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், திமுக எம்எல்ஏ-க்கள் போல பாமக எம்எல்ஏக்களும் ஸ்டாலின் புகழ் பாடினார்கள்.

வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை, வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகள் நினைவாக சமூக நீதி மணி மண்டபம், வேளாண்மைக்குத் தனி பட்ஜெட், பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தது என திமுகவின் அறிவிப்புகளுக்கெல்லாம் ராமதாஸ் தொடர்ந்து பாராட்டு அறிக்கை வெளியிட்டுக்கொண்டே இருந்தார். இவையெல்லாம் அதிமுகவுக்கு அதிருப்தி தந்தாலும், தேர்தலை மனதில் கொண்டு மவுனம் காத்தது.

உச்சகட்டமாக, அண்மையில் அன்புமணியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினைக் குடும்பத்துடன் சென்று சந்தித்து அன்புமணி அழைப்பிதழ் தந்தார். ஆனால்,கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமியைத் தனியாகச் சென்று சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். திருமண வரவேற்பில் ஸ்டாலின் தொடங்கி கமல்ஹாசன்வரை பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், அன்றைய தினம் சென்னையில் இருந்தும் அதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. இதற்குக் காரணம், பாமக மீது அவருக்கு ஏற்பட்ட அதிருப்திதான் என்கிறார்கள்.

பாமகவின் இதுபோன்ற நகர்வுகள், அக்கட்சி திமுக முகாமுக்கு மாறும் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை பாமக வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பும் ஒருவகையில் திமுகவுக்கு மறைமுகமாக உதவும் வகையிலேயே இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. பெரிய கட்சியான அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தே வட மாவட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அப்படியிருக்க, தனித்துப் போட்டியிடுவது திமுகவுக்கு செய்யும் உதவிதானே என்ற குரலும் கேட்கிறது.

click me!