திமுக எம்.பி. முந்திரி ஆலையில் பாமக நிர்வாகி கொலை வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!

By vinoth kumarFirst Published Sep 22, 2021, 2:13 PM IST
Highlights

கோவிந்தராசுவின் மரணம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தினர் ஆரம்பகட்ட விசாரணை நடத்திவரும் நிலையில், அதை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

கடலூர் முந்திரி ஏற்றுமதி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுகவை சேர்ந்த எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார். செப்டம்பர் 19ஆம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பாத தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் தான் மரணத்திற்கு காரணம் எனது தந்தையின் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் மற்றும் அடித்து துன்புறுத்தி அடையாளங்கள் இருந்ததாகவும். தனது தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும்,  இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் தான் காரணம் எனவும், மேலும் எனது தந்தையின் மரணத்தை உரிய முறையில் காவல்துறை விசாரிக்கவில்லை எனக் கூறி, தந்தையின் மரணம் தொடர்பான காடாம்புலியூர் காவல் நிலைய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் வழக்கு தொடர்ந்தார். 

மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் உடலை அங்குள்ள மூன்று மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி மனுதரார் விரும்பினால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவரை அனுமதிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், மனுதாரர் தரப்பில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதன் மருத்துவர்களை கொண்டுதான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு நாளை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

கோவிந்தராசுவின் மரணம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தினர் ஆரம்பகட்ட விசாரணை நடத்திவரும் நிலையில், அதை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆய்வாளரின் விசாரணையை பண்ருட்டி டி.எஸ்.பி. கண்காணிக்கவும், அதை கடலூர் எஸ்.பி. மேற்பார்வையிட வேண்டுமெனவும் உத்தரவிடுள்ளார். காவல்துறையினரின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

click me!