சென்னை பெரம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து நேர் காணலுக்கும் சென்ற மறைந்த முன்னாள் அமைச்சர் என்.வி.என் சோமுவின் மகள் டாக்டர் கனிமொழிக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், நேராக ஸ்டாலின் அறைக்குச் சென்று இனிமேல் இந்த அறிவாலய வாசல்படி மிதிக்க மாட்டேன் என கோபமாக கூறிவிட்டு சென்றதால் அக்கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுகவில் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவமும், தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, மறைந்த தங்கப் பாண்டியனின் மகனும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டியனும் போட்டியிடுகின்றனர்.
undefined
அதே நேரத்தில் திமுகவின் மிக முக்கிய பொறுப்புகளை வகித்த மறைந்த மத்திய அமைச்சர் என்விஎன் சோமுவின் மகள் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் சீட் கேட்டது மக்களவைத் தொகுதிக்கு அல்ல. இடைத் தேர்தல் நடைபெறும் பெரம்பூர் தொகுதிக்கு. என்வி நடராஜன் திமுகவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். அவது மகன் என்விஎன் சோமு திமுகவில் பெரிய ஜாம்பவான், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்.
இப்படி திமுகவுடன் மிக நெருக்கமான குடும்பதினருக்கு சீட் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்களே வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் டாக்டர் கனிமொழிக்குத்தான் சீட் என உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததுடன் நேர் காணலுக்கும் வந்து சென்றார் டாக்டர் கனிமொழி.
ஆனால் கடைசி நேரத்தில் திமுகவின் அதிகார மையமான ஓ.எம்.ஜி. குரூப் தலையீட்டால் ஆர்.டி.சேகருக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் கோபமான கனிமொழி சோமு, வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாள் காலை அறிவாலயத்துக்கு வந்தார்.
அவர் கையில் ஒரு கடிதம் இருந்தது. நேராக தலைவர் ஸ்டாலின் அறைக்குப் சென்ற கனிமொழி, கண்கள் கலங்க, நான் ஏற்கெனவே நான் இரண்டு முறை தோற்றதுக்கு காரணமே கட்சி நிர்வாகிகள் தான் என கூறிவிட்டு சென்று விட்டார்
இதையடுத்து தற்போது வரை அறிவாலயம் பக்கமே கனிமொழி வரவில்லை. இனி அவர் அறிவாலயம் வருவாரா என்பதும் சந்தேகம்தான் என்கின்றனர் உடன்பிறப்புகள்.