
மாநில சட்டப்பேரவை மற்றும்அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டியகடமைப் பொறுப்பில் உள்ளவர் ஆளுநர். ஆனால், அவரின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்ட அத்துமீறல் என்பதுடன் மக்கள் பிரதிநிதி ஆட்சி முறைக்கு எதிராக தலையிட்டு, போட்டி அரசை நடத்தும் அதிகபட்ச அத்துமீறலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்கள் மாநாடு
உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாட்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைக்கிறார். இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில், புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி ஆகிய கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அதிகாரி வேம்பு உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இணைவேந்தர் பெயர் எங்கே?
இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு ஆளும் திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீட் விலக்கு மசோதா உட்பட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்த நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பேராசிரியர்களுடன் கலந்துகொள்ளும் மாநாட்டை அவர் கூட்டியுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தர் பொறுப்பில் உள்ள உயர்கல்வித் துறை அமைச்சரின் பங்கேற்பு குறித்த இதில் தகவல் இல்லை.
முத்தரசன் காட்டம்
மாநில சட்டப்பேரவை மற்றும்அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டியகடமைப் பொறுப்பில் உள்ளவர் ஆளுநர். ஆனால், அவரின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்ட அத்துமீறல் என்பதுடன் மக்கள் பிரதிநிதி ஆட்சி முறைக்கு எதிராக தலையிட்டு, போட்டி அரசை நடத்தும் அதிகபட்ச அத்துமீறலாகும். தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்று செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அரசியல் அமைப்புச் சட்டம்மாநில அரசுக்கும் மக்களாட்சிக்கும் வழங்கியுள்ள சட்ட உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த மாநாட்டை துணை வேந்தர்களும், பேராசிரியர்களும் புறக்கணிக்க வேண்டும்.” என்று அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.