அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்கள் பசி தாகம் ஆகியவற்றை மறந்து நோன்பு இருக்கிறார்கள். இதனை தங்கள் கடமையாக நினைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கலைஞர் அவர்களின் நட்பு என்பது காலங்காலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது தொடரத்தான் போகிறது. அதை யாராலும் கலைக்க முடியாது. பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞரை திருவாரூரில் சந்திக்க காரணமாக இருந்தது இசுலாமியர்களின் மிலாது நபி பண்டிகை தான்.
undefined
கலைஞரை பற்றி கேள்விப்பட்டு திருவாரூர் வந்த அண்ணா, கலைஞரை அழைத்து வர சொன்னார். கலைஞருக்கு இது போல பல்வேறு தருணங்களில் பக்கபலமாக இருந்து உதவியது இசுலாமியர்கள் தான். கலைஞருக்கு இசுலாமிய மக்களுக்குமான தொடர்பு ஆழமானது. இஸ்லாமிய சமுதாயத்தில் ஒருவரை அமைச்சராக வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி தான். எதிர்கட்சியாக இருந்த காலம் தொடங்கி இசுலாமியர்கள் உரிமைக்காக குரல் கொடுத்தது திமுக தான். திமுக ஆட்சி காலத்தில் தான் முதன் முறையாக சிறுபான்மை ஆணையம், சிறுபான்மை நலக்குழு, சிறுபான்மை நல பொருளாதார குழு அமைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் தான் சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
கலைஞர் ஆட்சி காலத்தின் போது இசுலாமியர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவரின் வழியில் தற்போது ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் நான் செய்து வருகிறேன். அதன்படி குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது கலைஞரின் மகனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அதிமுகவினர்கள்தான். அதனால் தான் குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழ் இனத்தை சாதி - மதத்தால் பிரிக்க சிலர் பார்கிறார்கள். அப்படி செய்தால்தான் தமிழ் இனத்தை அழிக்க முடியும் என நினைக்கிறார்கள். நம்மை பிளவு படுத்தும் மூலமாக நம் முடைய வளர்சியை தடுக்க பார்கிறார்கள், அதற்கு தமிழ் இனம் அனுமதிக்க கூடாது என்று கூறினார்.