ஜெயலலிதா அதிகம் உச்சரித்த, எழுதிய பெயர் என்ன தெரியுமா.? ஜெ. கைப்பட எழுதிய துண்டுச்சீட்டை பகிர்ந்த பூங்குன்றன்!

By Asianet TamilFirst Published Dec 5, 2021, 10:34 PM IST
Highlights

2000-ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று, ‘பூங்குன்றன்.. இன்னும் ஒருவர் யாரையாவது சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம்’ என்று தன் கைப்பட எழுதிய துண்டுச் சீட்டைப் பதிந்துள்ளார் பூங்குன்றன்,

ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய துண்டுச் சீட்டை, அவருடைய உதவியாளர் பூங்குன்றன் பகிர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்து இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல்வரான ஜெயலலிதா, செப்டம்பர் 22 அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5 அன்று காலமானார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர் பதவியில் அமர்ந்து ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தனர். தற்போது அதிமுகவை அவர்கள் வழி நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஓபிஎஸ்-ஈபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முதலே அதிமுகவினர் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவிடம் நீண்ட காலம் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன், ஜெயலலிதா நினைவைப் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பூங்குன்றன் நான்கு பதிவுகளைப் பதிவிட்டிருந்த நிலையில், அதில் ஜெயலலிதா கைப்பட எழுதிய குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

2000-ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று ஜெயலலிதா, ‘பூங்குன்றன்.. இன்னும் ஒருவர் யாரையாவது சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம்’ என்று தன் கைப்பட எழுதிய துண்டுச் சீட்டைப் பதிந்துள்ள பூங்குன்றன், “அம்மா உச்சரித்த பெயரும், அதிகம் எழுதிய பெயரும் என் பெயர் என்பதைவிட வேறு என்ன பாக்யம் வேண்டும்... இதைவிட வேறென்ன பெரிது. வணங்குகிறேன் தாயே!” என்று பதிவிட்டுள்ளார் பூங்குன்றன். இது ஃபேஸ்புக்கில் பலரையும் கவர்ந்துள்ளது. ஜெயலலிதா கைப்பட எழுதிய அந்தச் சீட்டை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

click me!