Corona vaccine: தடுப்பூசி பேனரில் மோடி படம் எங்கே..? கருணாநிதி, ஸ்டாலின் பேனரை தூக்கி எறிந்த பாஜகவினர்..!

By Asianet TamilFirst Published Dec 5, 2021, 9:22 PM IST
Highlights

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகின்றன. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுள்ளது. மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகளைத்தான் மாநில அரசுகள் செலுத்தி வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாததால், மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்த பாஜகவினரை போலீஸார் தேடி வருகிறார்கள். 

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகின்றன. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுள்ளது. மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகளைத்தான் மாநில அரசுகள் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் வைக்கப்படும் பேனரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் படங்கள் இடம் பெறுவதை பாஜகவினர் எதிர்த்து வருகின்றனர். பிரதமர் மோடி படத்தையும் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். இதேபோல மத்திய அரசு மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்போது ரேஷன் கடைகளில் உள்ள பேனரிலு பிரதமர் மோடி படத்தை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் இருப்பது போல பிரதமர் படத்தையும் வைக்க வேண்டும் என்றும் பாஜகவினர் கோரி வருகிறார்கள்.

இந்நிலையில்  தமிழகம் முழுவதும் இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படம், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்தவர்கள், பேனரில் மோடி படம் ஏன் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். அங்கிருந்த மருத்துவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் ஆத்திரத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரையும் அவிழ்த்து தூக்கி எறிந்ததாகவும் மருத்துவர்களை எச்சரிக்கும் விதத்தில் பேசியதாகவும் தெரிகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சாலைகிராமம் காவல் நிலையத்தில், சாலை கிராம ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கண்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் உடனே வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அப்பகுதியில் பாஜகவைச் சேர்ந்த கோவிந்தன், செல்லப்பாண்டி உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
 

tags
click me!