
கர்நாடகாவில் நேற்று முன்தினம் மலர்ந்திருக்கும் தாமரை, அப்படியே பூத்துக்குலுங்கப்போகிறதா? இல்லையா என இன்று மாலைக்குள் நடக்கப்போகும் இந்த மாற்றத்தை காண இந்தியா முழுவதுமே பேராவலுடன் காத்திருக்கிறது.
இன்றைய எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பது குறித்த சில தகவல்களை கர்நாடக சட்டசபை செயலாளர் மூர்த்தி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நடை பெற்ற தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும், வென்றிருக்கிறது. அதிக தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தாலும் ,கர்நாடகாவில் அவர்கள் ஆட்சி அமைக்க தடையாக இருக்கிறது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்.
இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கும் பட்சத்தில் பா.ஜா.க வினால் பெறும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய்விடும். கூட்டணிக்கட்சி தான் ஆட்சி அமைக்க இயலும். இந்த குழப்பங்களுக்கு இடையே நேற்று எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றிருந்தார். அவருக்கு தனது கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் கர்நாடக ஆளுநர்.
இதனை தொடர்ந்து காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனால் தற்போது எடியூரப்பாவிற்கு தனது கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே அவகாசம் கொடுத்து உத்தரவிட்டிருக்கிறது. கர்நாடக உச்ச நீதி மன்றம். இதனால் நாளை மாலைக்குள் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பா.ஜ.க. தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின்படி, பா.ஜ.க தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்து ,பெரும்பான்மை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் சட்டசபை செயலாளர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று சபாநாயகர் சொல்வார். அப்போது, ஆதரவு தெரிவித்து எழுந்து நிற்பவர்களின் ஒவ்வொருவரின் பெயரும் எழுதி கொள்ளப்படும். அதன் பிறகு தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று சபாநாயகர் கூறுவார். அப்போது எழுந்து நிற்பவர்களின் பெயர்கள் எழுதிக் கொள்ளப்படும்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபை அரங்கு கதவுகள் மூடப்படும். மூடப்பட்ட பிறகு உள்ளே வரவோ, உள்ளேயிருந்து வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதி கிடையாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், அதன்படி எண்ணிக்கை கூட்டப்படும். இவ்வாறு மூர்த்தி கூறினார். குரல் வாக்கெடுப்பு மூலமும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம். ஆனால், இது முக்கியமான விவகாரம் என்பதால் குழப்பத்தை தவிர்க்க தலைகளை எண்ணி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என தெரிகிறது.