சசிகலா சித்ரவதை நமக்கு தேவையா..? ஓபிஎஸுக்கு எதிராக கொதிக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்..!

By Asianet TamilFirst Published Oct 27, 2021, 8:57 AM IST
Highlights

சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ஓபிஎஸ் சொல்ல வேண்டும் என்று அதிமுக சென்னை மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் தெரிவித்துள்ளார்.
 

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம் இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ளார். “அதிமுகவை வழிநடத்த நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்தான் ஒருங்கிணைப்பாளர்கள். அவர்களுடைய முடிவை நம் மீது திணிக்க கூடாது. நம்முடைய முடிவைதான் அவர்களிடம் சொல்ல வேண்டும். சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ஓபிஎஸ் சொல்ல வேண்டும்.


ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் போகிறபோக்கில் பத்திரிகையாளர்களுக்கு சொல்லிவிட்டு போயிருப்பார்.   நிச்சயமாக சசிகலாவை அதிமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை ஓபிஎஸ் எதிர்ப்பார். அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைந்த பிறகு, டி.டி.வி.தினகரனை ரகசியமாக சந்தித்தார். அவர் சந்தித்ததை அரசியல் நாகரீகம் என்றுகூட பார்க்காமல் பொதுவெளியில் டி.டி.வி.தினகரன் போட்டு உடைத்தார். இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறது. பிறகு மறுபடியும் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் போகும்போது, இதுபோன்ற குழப்பங்கள் உருவாக கூடாது.


சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது என்பது தலைமை கழகம் சேர்ந்து எடுத்த முடிவுதான். அவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். அந்தம்மா ஆடியோ நாடகம் போட்டாங்க. இப்போது டூர் போறோம் என்கிறார். அவர் பொதுசெயலாளர் என்று போட்டதற்காக வழக்கு போட்டு இருக்கிறோம். இந்நிலையில் ஓபிஎஸ் இதுபோல பேசுவது மன வருத்தத்தை அளிக்கிறது. சசிகலாவை கட்சியில் இணைக்க ஓபிஎஸ் தயாராக இல்லை என்று நம்புகிறோம். அவரே தர்மயுத்தம் நடத்தியபோது, ‘அவர்கள் கொடுத்த சித்ரவதையில் தற்கொலையே பண்ணி விடலாமோ என்ற எண்ணமே எனக்கு வந்தது’ என்று சொல்லியிருக்கிறார். ஆக, ஓபிஎஸ் இதைபோல செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்.


ஆட்சியில் இருந்தபோது சசிகலா, அவர்களுடைய குடும்பத்தினர் பேச்சை கேட்டு 18 எம்எல்ஏக்கள் போனார்கள். அவர்கள் நிலைமை இன்று என்ன ஆனது? ஆட்சியில் இருந்தபோதே சின்னாபின்னமானார்கள். அவர்களுக்கே அந்த கதி என்றால், அவர்களை ஏற்றுக் கொண்டால், அவர்களை எதிர்த்த நம்மை எல்லாம் எந்தளவுக்கு சித்ரவதை செய்வார்கள்? கண்டிப்பாக எல்லா மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராகத்தான் தொண்டர்கள் பேசுவார்கள். இதில் மாற்று கருத்து இருக்காது.” என்று ஆதிராஜாராம் தெரிவித்துள்ளார்.
 

tags
click me!