
கையாலாகாத அரசுதான் தமிழகத்தில் இருக்கிறது என மக்கள் தீர்மானித்து விட்டதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவிற்கு எந்தவித தகுதியும் இல்லை எனவும் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலைவி கொண்டே வருவதால் தனது பெரும்பான்மையை கூட்டப்போவதாக முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி விழுப்புரத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் நடைபெற்ற செயல் வீரர் வீராங்கனைகள் கூட்டத்தில் ஒ.பி.எஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :
தனக்கு பின் இவர் தான் பொதுச்செயலாளர் என ஜெயலலிதா யாரையும் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் முதலீட்டாளர்கள் வெளி மாநிலத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள்.
காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக சிறிதும் செயல்படவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை.
கையாலாகாத அரசு தான் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.
ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள். வருகிற உள்ளாட்சி தேர்தல் பெரும் பாடமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.