"ரஜினி அதுக்கு சரிபட்டு வரமாட்டார்" - சூப்பர் ஸ்டாரை சூடாக்கும் சு.சாமி...

First Published May 22, 2017, 7:09 PM IST
Highlights
rajinikanth is not worth for politcs by subramaniya suvami


ரஜினிக்கு அரசியல் சரிபட்டு வராது என்றும், அவர் சினிமாவில் நடிப்பதே நல்லது என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, அவர் விரைவில் அரசியலுக்கு வருவதாக பகிரங்கமாக தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், அவருக்கு ஏற்ற இடம் பா.ஜ.க தான் என அக்கட்சியினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்து ரஜினிக்கு எதிராகவே குரல் கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து கடந்த வாரம் பேசுகையில், ரஜினிகாந்த் ஒரு தமிழரே அல்ல. அவர் கர்நாடகாவில் இருந்து வந்த மராத்தியர் எனவும், கொள்கையே இல்லாத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தோல்வியைத்தான் சந்திப்பார் எனவும் கருத்து கூறினார்.

அடுத்த இரண்டு நாட்களில் ரஜினிக்கு படிப்பறிவு இல்லை எனவும் அவர் மாறிமாறி பேசுவார் எனவும் தெரிவித்தார். மேலும் பாஜகவில் ரஜினிக்கு இடம் கொடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

ஆனால் இவர் பேச்சை பாஜகவில் யாரும் மதிக்கமாட்டார்கள் என்பதற்கு சிறந்த எடுத்து காட்டாக பாஜகவை சேர்ந்த அமித்ஷா ரஜினிக்கு நேரடியாகவே அழைப்பு விடுத்தது விட்டார்.

அதேபோல், நிதின் கட்காரியும் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜக எம்பியும், முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது முன்னுக்கு பின் முரணான கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் கூறி பல்வேறு சர்ச்சையை உண்டாக்கி வருவது புதிதல்ல.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, சினிமா நட்சத்திரங்களை தமிழக அரசியலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற எனது கருத்துக்கு பெரும்பாலான தமிழர்கள் மறைமுகமாக ஆதரிக்கிறார்கள். அதனால் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சற்று யோசிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் சரிப்பட்டு வராது, சினிமாவில் நடிப்பதே நல்லது என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.

அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜ் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்ரமணிய சுவாமியின் இத்தகைய கருத்துக்கள் ரஜினி வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பி வருகிறதாம். 

click me!