அதிமுகவை அழிக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க.. விஜயபாஸ்கருக்கு நாங்க இருக்கோம்.. கெத்து காட்டிய ஓபிஎஸ். இபிஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2021, 4:26 PM IST
Highlights

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர்.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வரும் சோதனை  ஸ்டாலின் அரசினுடைய பழிவாங்கும் நடவடிக்கையென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கண்டித்துள்ளனர். இதுகுறித்து  அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:

தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சி திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில், காவல்துறையை முடுக்கிவிட்டு இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. 

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் இருந்து நீதிமன்றத்திலே வழக்கை எதிர் நோக்கியிருக்கும் திமுக அமைச்சர்கள், அதனை திசை திருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பொய்யான குற்றச்சாட்டுகளை புனையும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் திறானியில்லாமல் ஆட்சி பொறுப்பேற்று மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல், குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியை பெற்றிருக்கிற திமுக அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியும். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர். எனவே காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் திரு. எம். ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் மீது காவல் துறையை ஏவி விட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!