ஆன்மீகத்தை நம்பாத கருணாநிதி பெயரை ரத வீதிக்கு வைக்க வேண்டாம்.. திமுகவை திணறடிக்கும் அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2022, 7:13 PM IST
Highlights

ஆன்மீகத்தை நம்பாத கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரை  ரத வீதிக்கு  வைக்க வேண்டாம்  என்பதுதான் பாஜகவின் கோரிக்கை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.  

ஆன்மீகத்தை நம்பாத கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரை  ரத வீதிக்கு  வைக்க வேண்டாம்  என்பதுதான் பாஜகவின் கோரிக்கை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.  ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகரில் குடியிருப்புகள் அப்புறப்படுத்துவது கண்டித்து தீக்குளித்து மரணமடைந்த கண்ணையா குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை இவ்வாறு கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்  அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது பெரும்பாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் ஒரு சில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்தையும் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது அந்த வரிசையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் 259 க்கும் அதிகமான வீடுகள் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மக்கள் மத்தியில் எதிர்ப்பை பெற்றுள்ளது. அதை கண்டித்து பாதிக்கப்பட்ட கண்ணையா என்பவர் கடந்த வாரம் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் அவர் குடும்பத்தினரை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார். பின்னர் வீடு இழந்த மக்களை விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 

ஒரு குறிப்பிட்ட தனிமனிதனின் லாபத்திற்காக பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த குடியிருப்புகள்  அகற்றப்படுகின்றன. 2016 வீட்டுவசதி வாரிய செயலராக இருந்த தர்மேந்திர பிரசாத் தனது அறிக்கையில் அதனை குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்கள் கோவிந்தசாமி நகரிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். மக்களை வெளியேற்றிவிட்டு திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இது உண்மையிலேயே வேதனையான சம்பவம்.  ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்காக மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். நீதிமன்றம் கூறியிருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு முறையாக வெளியேற்றுவதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. ஒரு குருவிக் கூட்டை கலைத்தால் குருவி சும்மா இருக்காது, கண்ணையா இறப்பதற்கு முன்னர் எனக்கு அனுப்புவதற்காக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ குறித்து நேற்று முன்தினம் தான் அவரது குடும்பத்தினர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

கோவிந்தசாமி நகரில் உள்ள ஒவ்வொருவருடனும் பாஜக நிற்கும். ஊமை மக்கள் மீது அதிகாரத்தை காட்டுவதுதான் திராவிட மாடலா? வீடுகளை அப்புறப்படுத்த அனைத்து வீடுகளுக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நியாயமாக நடந்து கொள்ளாததால் இந்த விவகாரம் குறித்து ஆளுநரிடம் முறையிட உள்ளோம்.  நாட்டிற்கே முன்மாதிரியாக இருந்து மக்களை கண்ணியமாக வெளியேற்றியிருக்கலாம். ஆனால் சுய நோக்கத்திற்காக மக்கள்  வெளியேற்றப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர். ஆனால் முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறிக்கொள்கிறார். ஏன் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வந்து சந்திக்கவில்லை, இப்பகுதி மக்களுடன் முதல்வர் சாப்பிடவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

கலைஞர் பெயரே வைக்க வேண்டாம் என கூறவில்லை, சாலையே இல்லாத இடங்களில் சாலைகளை அமைத்து அதற்கு கருணாநிதி பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஆன்மீகத்தை நம்பாத கலைஞர் கருணாநிதியின் பெயரை ரத வீதிக்கு வைக்க வேண்டாம் என்பதுதான் பாஜகவின் போராட்டத்திற்கான காரணம். ரத விதிக்கு கருணாநிதியின் பெயரை வைக்க மாட்டோம் என கே.என் நேரு கூறியிருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் கே.என் நேரு சப்பைக்கட்டு கட்டுகிறார் இவ்வாறு அண்ணாமலை கூறினார்.  
 

click me!