பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பா..? திமுகவுக்கு அப்படி எதுவும் வரலையே... டி.ஆர். பாலு விளக்கம்!

By Asianet TamilFirst Published May 28, 2019, 9:48 PM IST
Highlights

இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு வந்ததாகவும், அவர் சார்பில் திமுக மூத்த எம்பிக்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா ஆகி்யோர் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இத்தகவலை டி.ஆர். பாலு மறுத்துள்ளார்.
 

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக அழைப்பு வரவில்லை என்று திமுக எம்பியும் நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நாளை மறுதினம் பதவியேற்கிறார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்க உள்ளார்கள். டெல்லியில் மாலை 7 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் 8 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

 
இதேபோல பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்  தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலருக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு வந்ததாகவும், அவர் சார்பில் திமுக மூத்த எம்பிக்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா ஆகி்யோர் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இத்தகவலை டி.ஆர். பாலு மறுத்துள்ளார்.
இதுகுறித்து டி.ஆர். பாலு செய்தியாளர்களிம் பேசும்போது, “பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு வந்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை. மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. குடியரசுத் தலைவரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ அழைப்பு வரவில்லை.” என்று தெரிவித்தார். அழைப்பு வந்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, “அதை தலைமைதான் முடிவு செய்யும்” என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.

click me!