காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்த 2 முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டதுக்கு நாங்கள் தான் காரணம் ! காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் திமுக!!

By Selvanayagam PFirst Published Apr 3, 2019, 8:22 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து மற்றும் பள்ளிக்கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் என்ற இந்த இரண்டு கோரிக்கைளும் திமுகவால் வற்புறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அந்த இரண்டு கோரிக்கைகளும் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் திமுகவினர் தெரிவித்துள்ளனர்

காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில்  ஏற்கனவே தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் உரிமைகளை மதித்து மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தி.மு.க.வின் உயிர் மூச்சான ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றைப் பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அமைந்திருப்பது மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக மாணவர்களின் கனவான நீட் தேர்வு ரத்து என்ற காங்கிரசின் வாக்குறுதி எண்ணற்ற இளைஞர்களின் இதயத்தில் பால் வார்க்கிறது என்றும். மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில் பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்பதும், பள்ளிக்கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் என்பதும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதில் நீட் தேர்வு ரத்து மற்றும் பள்ளிக் கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற இந்த இரு கோரிக்கைகளை ஸ்டாலின் , ராகுல் காந்தியிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதாகவும், அதன் அடிப்படையிலேயே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இவை சேர்க்கப்படடதாகவும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.

click me!