பரிசுப் பெட்டியைப் பார்த்து அலறும் அதிமுக... தேர்தல் ஆணையத்துக்கு திடீர் கோரிக்கை!

By Asianet TamilFirst Published Apr 3, 2019, 7:02 AM IST
Highlights

அமமுகவின் தேர்தல் சின்னமான பரிசுப் பெட்டியை அட்டைப் பெட்டியில் செய்து பயன்படுத்தாமல், படமாக வரைந்து பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.  உச்ச நீதிமன்றம் சென்ற தினகரனுக்கு பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தினகரன் கட்சிக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. தற்போது தேர்தல் பிரசாரத்தில் பரிசுப் பெட்டியை செய்து அமமுகவினர் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார்கள். பரிசுப் பெட்டியை செய்து பிரசாரம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அதிமுக அணுகியுள்ளது. 


இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் மற்றும் வழக்கறிஞர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம்  புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி தினகரன் தரப்புக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக அட்டை பெட்டியில் செய்து பிரசாரம் செய்கிறார்கள். பரிசுப் பெட்டிக்குள் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வைத்து மாநிலம் முழுவதும் வினியோகம் செய்கின்றனர்.
இது தேர்தல் விதியை மீறிய செயலாகும். இது போன்று பரிசுப் பொருட்களோடு பரிசுப் பெட்டி வழங்குவதை தடுக்க வேண்டும். பரிசுப் பெட்டி சின்னத்தை அட்டையில் படமாக வரைந்து பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

click me!