ஓபிஎஸ் மகனுக்கு எதிராக களமிறங்கும் தினகரன்... தேனியில் மட்டும் 4 நாட்கள் பிரசாரத்துக்கு திட்டம்...!

By Asianet Tamil  |  First Published Apr 3, 2019, 6:30 AM IST

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரின் மகனுமான ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் 4 நாட்கள் தங்கி  பிரசாரம் மேற்கொள்ள அமமுக துணைப் பொதுசெயலாளர் தினகரன் திட்டமிட்டுள்ளார்.


தேனி தொகுதி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கி உள்ளார். அமமுக சார்பில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரும் தினகரனின் வலதுகரமுமான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.


மூன்று தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் தேனியில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்கிறது. இளங்கோவனை ஆதரித்து தேனியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி தேனியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் களமிறங்கியிருக்கிருக்கும் அமமுக துணைப் பொதுசெயாலளர் தினகரன், தேனி தொகுதியில் மட்டும் 4 நாட்கள் தங்கி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.  
தேனி தொகுதியில் எப்படியும் ஓபிஎஸ் மகனை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன். அதனால்தான் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனை தேனி மக்களவை தொகுதிக்கும் களமிறக்கி உள்ளார். ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று பிரசாரம் மேற்கொள்ளும்வகையில் பிரசாரம் பயணம் அக்கட்சி சார்பில் வகுக்கப்பட்டுவருகிறது. தேனியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஏப்ரல் 11ம் தேதி தினகரன் வர உள்ளார்.

Tap to resize

Latest Videos


தொடர்ச்சியாக 4 நாட்கள் தேனியில் தினகரன் பிரசாரம் செய்ய இருப்பதால், அந்தத் தொகுதியில் அவருக்கு வாடகை வீட்டை தேடிவருகிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.
 

click me!