தமிழகத்தில வேண்டாம்... கர்நாடகாவில் போய் வைச்சுக்கோங்க... ரஜினிக்கு திமுக எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Sep 19, 2019, 4:30 PM IST
Highlights

ரஜினிகாந்த் பா.ஜ.க.வின் ஊது குழலாகத்தான் செயல்பட்டு வருகிறார் என திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி மொழி பற்றிய பேச்சுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.  தமிழகத்திலும் கண்டக்குரல்கள் எழுந்தன. நேற்று நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, ’’தமிழ்நாடு மட்டுமல்ல வடமாநிலங்களில் கூட இந்தியை பொதுவான ஒரு மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் நமது நாட்டில் நிலவுகிறது. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால், அந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது.

ஆனால் துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான ஒரு மொழியை அமல்படுத்த முடியாது. இந்தியை திணிக்க முயன்றால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்’’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் , ‘’நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கே வரவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தன்னை காட்டிக் கொண்டு பேட்டி அளிப்பது ரஜினியின் வாடிக்கை. தமிழகத்தில் சொல்வது போன்ற கருத்துக்களை, ரஜினி கர்நாடகாவில் சொல்ல வேண்டியதுதானே.

பல்லாவரத்தில் அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்து என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டியது தானே? ஏதாவது கருத்து சொன்னாரா? எனவே ரஜினியின் இந்தி பற்றிய கருத்தும் பா.ஜ.க.வின் கருத்தும் ஒப்பிட்டு பார்த்தால் எல்லாமே பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். அவர் சொன்னார்? இவர் சொன்னார்? என்று ரஜினி பேசுவார். தனது கருத்து என்ன என்பதை தெளிவுபட கூற மாட்டார்.

ஏற்கனவே காஷ்மீர் தொடர்பாக கருத்து சொன்னார். தற்போது இந்தி தொடர்பாக கருத்து சொல்லி இருக்கிறார். ரஜினிகாந்த் பா.ஜ.க.வின் ஊது குழலாகத்தான் செயல்பட்டு வருகிறார்’’என விமர்சித்துள்ளார். 

click me!