DMK Vs NTK issue : கண்டதையெல்லாம் பேசுவதா.? வரம்பு மீறும் சீமானுக்கு கண்டனம்.. அதிமுக மாஜி அமைச்சர் சரவெடி.!

By Asianet TamilFirst Published Dec 23, 2021, 8:02 PM IST
Highlights

சீமான் மிக பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். தனிநபர் தாக்குதலோ விமர்சனமோ இருக்கக் கூடாது. நம் நாட்டின் அடிப்படைச் சட்டங்களை மீறாமல் கருத்துச் சொல்ல வேண்டும். கண்டதையெல்லாம் பேசக் கூடாது.

லெட்டர் பேடு கட்சியினர் தங்களுடைய இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள வரம்புமீறியும் எல்லை மீறியும் செயல்படுகிறார்கள். சீமான் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போது திமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே நடக்கும் மோதல்தான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக். மேடையில் செருப்பைக் கழற்றி சீமான் காட்டியதும், அதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டம் மொராப்பூரில் நாம் தமிழர் மேடையில் திமுகவினர் ஏறி நடத்திய தாக்குதல் போன்ற சம்பவங்கள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக, நாதக என இரு கட்சிகளையும் பலர் கண்டிக்கிறார்கள். முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கூட, திமுகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இந்த சம்பவங்கள்  தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், “ நாம் தமிழர் கட்சியினர் மீது நடந்த தாக்குதல் என்பது, ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு ஏற்பட்ட தாக்குதல். அப்படித்தான் இதைப் பார்க்கிறேன். அதேசமயம், கருத்து சொல்ல இங்கு எல்லாருக்குமே உரிமை உள்ளது. அப்படியே பேசினாலும் நீதிமன்றத்தின் மூலமாக தண்டனைப் பெற்று தரலாமே தவிர நாமே கொடுப்பது ஆளுங்கட்சிக்கு அழகல்ல. இதெல்லாம் காட்டுமிராண்டிக் காலத்தை நினைவுப்படுத்துகிறது. எந்தப் பிரச்னைக்கும் வன்முறை என்பது தீர்வு அல்ல. அகிம்சையால் சுதந்திரம் பெற்ற நாடு இது. 

நாம் நாகரீக உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். மேலும் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பலவற்றையும் விமர்சனம் செய்கிறார்கள். எல்லாம் பேசுகிறார்கள் என்று எல்லோரையும் தேடி அடிக்க முடியுமா? திமுகவினர் இப்படியே நடந்தால் மீண்டும் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கிவிட்டது என்று மக்கள் நினைப்பார்கள். வன்முறையைக் கட்டவிழ்த்து விடக் கூடாது. இந்தத் தாக்குதல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

அதேசமயம், கருத்து சொல்லும்போது சீமானும் மிக பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். தனிநபர் தாக்குதலோ விமர்சனமோ இருக்கக் கூடாது. நம் நாட்டின் அடிப்படைச் சட்டங்களை மீறாமல் கருத்துச் சொல்ல வேண்டும். கண்டதையெல்லாம் பேசக் கூடாது. தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும் இருப்பை காட்டிக்கொள்ளவும் வரம்பு மீறி பேசக் கூடாது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான லட்டர்பேடு கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சியினர் எல்லோரும் தங்களுடைய இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள வரம்புமீறியும் எல்லை மீறியும் செயல்படுகிறார்கள். இதுபோன்ற பேச்சுகளை மக்கள் ரசிக்கமாட்டார்கள். சீமான் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 

click me!