ஒரு பைசா காசு வாங்கல.. திமுகவின் டிரான்ஸ்பரன்ட் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்.. மகிழ்ச்சியில் டாக்டர்கள்..!

By Selva KathirFirst Published May 24, 2021, 11:54 AM IST
Highlights

அரசு மருத்துவர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்களிடம் ஒரு பைசா கூட காசு வாங்காமல் அவர்கள் கேட்ட இடங்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்களிடம் ஒரு பைசா கூட காசு வாங்காமல் அவர்கள் கேட்ட இடங்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவ பணிகள் இயக்ககம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களுக்கான பணியிடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று மருத்துவர்கள் தங்களுக்கு தேவையான இடங்களில் பணிகள் வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பர். மருத்துவர்கள் பணியிடமாறுதல் கேட்கும் இடங்களில் பணியிடங்கள் காலியாகவே இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக அங்கு பணிகள் ஒதுக்கப்படாது. மாறாக மருத்துவர்கள் பணியிடமாறுதல் கோரும் நகரங்களுக்கு ஏற்ப 1 லட்சம் ரூபாய் முதல் 5லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும்.

இப்படி லஞ்சம் கொடுத்தால் தான் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மருத்துவர்களால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிடமாறுதல் பெற முடியும். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் ஒரு வருடம் கூட லஞ்சம் கொடுக்காமல் ஒரு மருத்துவர் கூட பணியிடமாறுதல் பெற்று இருக்க முடியாது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்ரமணியன் பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் டாக்டர்களுக்கான பணியிடமாறுதல் கவுன்சிலிங் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. பணியிடமாறுதல் கோரிய டாக்டர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கவுன்சிலிங்கில் பங்கேற்று தங்களுக்கு தேவையான இடங்களை குறிப்பிட்டு பணியிடமாறுதல் கோரினர். கவுன்சிலிங் முடிந்த அடுத்த சில நாட்களில் மருத்துவர்கள் அனைவருக்கும் தாங்கள் கேட்ட இடங்களுக்கு உடனடியாக பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. இதற்காக உத்தரவு உடனடியாக மருத்துவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பார்த்து மருத்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

ஏனென்றால் வழக்கமாக கவுன்சிலிங் முடிந்த பிறகு தொடர்புடைய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பார்கள். அதனை கொடுத்த பிறகே பணியிடமாறுதல் வழங்கப்படும். ஆனால் இந்த முறை மிகவும் வெளிப்படையாக கவுன்சிலிங் நடத்தி, பணியிடமாறுதல் கோரிய அனைவருக்கும் அவர்கள் கேட்ட இடத்திற்கு ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் சுகாதாரத்துறை பணியிடமாறுதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் திமுக ஆட்சியில் ஆரம்பமே சுகாதாரத்துறையில் அமர்க்களமாக இருப்பதாக மருத்துவர்கள் பேச ஆரம்பித்துள்ளர்.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பணியிடமாறுதல் பெற்ற மருத்துவர்கள் மட்டும் அல்லாமல் அனைது அரசு மருத்துவர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதே போல் விரைவில் பிஜி முடித்த அரசு மருத்துவர்களுக்கான பணிஒதுக்கீடு கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இதுவும் வெளிப்படையாகவும், முறையாகவும் நடைபெறும் என்று சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் முன் களப்பணியாளர்களாக தங்கள் உயிரை பணையம் வைத்து டாக்டர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து தமிழக அரசு செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது.

click me!