பழைய வழக்குகளை தூசு தட்டும் திமுக . முன்னாள் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் வீட்டில் மீண்டும் ரெய்டு.

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2021, 10:07 AM IST
Highlights

7 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பாண்டியன்.  

7 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பாண்டியன். பாண்டியன் பல நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கி அது மூலமாக  லஞ்சம் பெற்று அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிசம்பர் 14 ஆம் தேதி சென்னை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனின் அறை மற்றும் சென்னை விருகம்பாக்கம் திலகர் தெருவில் உள்ள அவரது இல்லம் ஆகிய இரு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில் 1.37 கோடி பணம் மற்றும் 3 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் உட்பட 7 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் சிக்கியது. அதனைத் தொடர்ந்து முன்னாள் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாண்டியனை பணி நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் திருமயம் என்கின்ற இடத்தில் முன்னால் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனுக்கு சொந்தமான இடத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது பாண்டியன் தனது வருமானத்திற்கு மேல் 10 மடங்கு சொத்து சேர்த்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பாண்டியனுக்கு சொந்தமான வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வைத்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு தற்பொழுது சென்னை விருகம்பாக்கம் திலகர் தெருவில் அமைந்துள்ள பாண்டியனின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சோதனையானது பாண்டியன் வாங்கி வைத்துள்ள சொத்துக்கள் குறித்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நகல்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சொத்துக்குவிப்பு உதவியவர்கள் யார் என்ற கோணத்திலும், முறைகேடாக அனுமதி வழங்க லஞ்சம் வழங்கியவர்கள் என பல கோணங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சி பெறுப்பு ஏற்றுள்ள நிலையில் பழைய வழக்குகள் தூசு தட்டி எடுத்து மீண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
 

click me!