
அ.தி.மு.க.வின் வரலாற்றில் நேற்றைய தினமானது அடிக்கோடிட்டு வைக்கப்பட வேண்டிய நாள். ஒட்டுமொத்த உடம்பின் இயக்கத்துக்காக மூளை சொல்லிய கட்டளையை கேட்டு ஒத்துழைக்க மறுத்த 18 அவயங்களை வெட்டி வீசியிருக்கிறது அக்கட்சி. பக்க விளைவு, பக்கவாட்டு விளைவு என்று எதைப்பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு ‘ஒருவேளை ஜெயலலிதாதான் அரசாள்கிறாரோ?!’ என்று ஐய்யப்படுமளவுக்கு அதிரடியான முடிவுதான். இந்த உத்தரவில் அதில் நியாயம், தர்மம் இருக்கிறதா, சட்டப்படிதான் எடுக்கப்பட்டுள்ளதா? என்பதெல்லாம் வேறு கணக்கு. ஆனால் கட்டி வர வழியில்லாத நிலையில் வெட்டிவிட்டிருக்கிறார்கள்.
இந்த அதிரடியை தொடர்ந்து எதிர்கட்சியான தி.மு.க. இன்று அண்ணா அறிவாலயத்தில் தங்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தியது. தமிழகமே எதிர்நோக்கிக் கொண்டிருந்த அதன் தீர்மானங்கள் இதோ வந்து விழுந்திருக்கின்றன.
அதுபற்றிய ஒரு பார்வை:
* உள்கட்சி விவகாரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை எடுத்து வைக்கவும், தி.மு.க.வை அநாகரிகமாக விமர்சிப்பதற்கும் ‘அரசு விழாக்களை’ பயன்படுத்தி இந்த குதிரை பேர அ.தி.மு.க. அரசு மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்து வருகிறது. இது போன்ற ‘அரசியல்மயமான அரசு விழாக்கள்’ நடத்த நிதி ஒதுக்கீடு செய்யும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் ‘அரசு பணத்தை வீணடித்ததற்கு’ விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வரும் என்று இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எச்சரிக்க விரும்புகிறது.
* ’குட்காவை கண்டுபிடியுங்கள்’ என்றால் அதை விடுத்து குதிரை பேரம் செய்ய கர்நாட மாநிலத்திற்கு போலீஸை அனுப்பி உள்கட்சி பகைமையைத் தீர்த்துக் கொள்ள காவல் துறையை பயன்படுத்தி வருகிறது இந்த அரசு. தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் திரு டி.கே. ராஜேந்திரன், அதிமுக.வின் ‘தனி பாதுகாப்பு அதிகாரி’ போல் செயல்படுவதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள். பெண்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதமில்லை. மாவட்ட ஆட்சித்தலைவரின் உயிருக்கே பாதுகாப்பில்லை. இந்நிலையில் தமிழக காவல்துறையை அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களுக்கு முழுமையாக பயன்படுத்துவது காவல்துறை தலைவருக்கு அழகல்ல. ஆகவே எதேச்சதிகார அதிகார துஷ்பிரயோகத்தை இந்த கூட்டம் கடுமையாக கண்டிக்கிறது.
* தமிழக சட்டமன்ற சபாநாயகர், முதலமைச்சர், ஆளுநர் மூவரும் கூட்டணி அமைத்து இழந்து விட்ட பெரும்பான்மையை மீக்ட குறுக்கு வழியில் அரசியல் சட்டத்தையும், கட்சி தாவல் தடைச்சட்டத்தையும் பயன்படுத்தியிருப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் உயிரோட்டத்தை நிறுத்தி ஜனநாயாக நெறிமுறைகளை வேரறுக்கும் செயல் என்று இந்த ச.ம.உ. கூட்டம் வேதனையுடன் கருதுகிறது.
* மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது அவரது சட்டமன்ற தொகுதி காலியானது பற்றி அறிவிக்கும் அரசிதழை வெளியிட ஏறக்குறைய 48 நாட்கள் எடுத்துக்கொண்ட சபாநாயகர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்தை உடனே அரசிதழில் வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது மட்டுமில்லை கட்சித்தாவல் தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையை குறுக்கு வழியில் அடைவதற்கு முதலமைச்சருக்கு துணை போயிருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
* நடுநிலை தவறிவிட்ட சபாநாயகர் திரு. தனபால், ‘குதிரை பேரம்’ மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும் தங்களது பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற மரபையும், அரசியல் சட்டத்தின் புனிதத்தையும் பாதுகாக வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
* கழக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவிற்கும் இக்கூட்டம் தனது முழு ஒப்புதலை அளிக்கிறது என்பதை தெரிவிக்கிறது.
...இதுதான்.
தி.மு.க.வின் அவசர கூட்ட தீர்மானங்கள் தமிழக அரசியலை தெறிக்கவிடப்போகிறதா அல்லது தேங்கி நின்றுவிடப்போகிறதா என்று கவனிப்போம்!