
அரசு சார்பாக கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தங்களை விமர்சிப்பது சரியா என்றும், நீதிமன்றம் நாளை வழங்கவுள்ள தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற காரணத்திற்காகவும் பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கிலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.
இந்த தகுதிநீக்க நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே குட்காவை சட்டமன்றத்திற்கு எடுத்துச் சென்றதாக 21 திமுக எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிடுவார்களோ என்ற கலக்கம் திமுகவிற்கு ஏற்பட்டது.
இதையடுத்து அப்படி ஒரு சூழல் உருவானால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது என்பன குறித்து மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், அரசுவிழாக்களை அரசியல் மேடையாக்கும் குதிரை பேர அரசுக்கும் தலைமைச் செயலாளர் - காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் கண்டனம், ஆளுநர் - முதல்வர் - சபாநாயகரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், அரசு சார்பாக கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தங்களை விமர்சிப்பது சரியா என்றும், நீதிமன்றம் நாளை வழங்கவுள்ள தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து தமிழக அரசு இயக்கப்படுகிறது எனவும், நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.