வெளியே போனால் போ காங்கிரஸ்: கூட்டணிக்கு பொங்கல் வைத்த துரைமுருகன்

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2020, 5:44 PM IST
Highlights

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச் சென்றால் கவலை இல்லை. அக்கட்சிக்கு ஓட்டே கிடையாது, அவர்கள் பிரிந்து சென்றாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. -துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)

 

*மத்திய இணை அமைச்சராக இருந்த  பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.சாண்ட் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். ஆகவேதான் அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.சி.டி.வி. கேமெராக்கள் பொருத்தப்படாமல் பார்த்துக் கொண்டனர். எஸ்.ஐ. வில்சன் கொலை  விசாரணையில், கேரளாவில் சி.சி.டி.வி. கேமெரா காட்சிகளை வைத்தே கொலையாளிகளை தேடுகின்றனர். ஆனால் தனது சுய நலத்துக்காகவும், மணல் கடத்தல் விவகாரத்தில் மாட்டிக் கொள்ளாமல் மறைக்கவுமே சி.சி.டி.வி. கேமெராக்களை தடுத்திருக்கிறார் பொன்னார். 
-அப்பாவு (மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ.)

*காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. ஏழை மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஏழை மக்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுப்பது மட்டுமில்லாமல், அவர்களது வயிற்றிலும் எட்டி உதைக்கிறது. -பிரியங்கா காந்தி (காங்., பொதுச்செயலாளர்)

*குடியுரிமை சட்ட திருத்தத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த விஷயத்தில் பொய் பிரசாரம் செய்து, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். -யோகி. ஆதித்யநாத் (உ.பி.முதல்வர்)

*வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால், வருமானம் குறைந்துவிடும். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கோப பார்வைக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும். காய்கறி விலை 60% அதிகரித்துள்ளது. வெங்காயம் கிலோ நூறுக்கு விற்கிறது. இதுதான் பா.ஜ.க. அரசு தெரிவித்த நல்ல நாளா? -ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.)

* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. நாட்டிலேயே முதன்மை மாநிலமாக நம் மாநிலம் திகழ்கிறது. நிலைமை இப்படியிருக்க, பா.ஜ.க.வை சேர்ந்த மாஜி மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எந்த அடிப்படையில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கிறது! என்று சொன்னார் என தெரியவில்லை. -தங்கமணி (மின்வாரிய துறை அமைச்சர்)

*சமீபத்தில் அந்தமான் சென்றிருந்தபோது அங்குள்ள சுற்றுலா இடங்களைக் காண சென்றேன். அங்கு வந்திருந்த தமிழகம், ஆந்திரா மற்றும் வட மாநில மக்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தமிழகத்தின் அடுத்த முதல்வர் நீங்கள்தான்! என வாழ்த்தினர். -மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*நம் கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும், இடைத்தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில்  அமோக வெற்றி பெற்றதை விளக்க வேண்டும். இதற்காக மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை ஐந்து நாட்கள் நடத்த வேண்டும். - இ.பி.எஸ். & ஓ.பி.எஸ். கூட்டறிக்கை. 

*இந்தித் திணிப்பை எதிர்த்து, போக்கோலம் பூணும் தமிழகத்தில் தான் இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வ்யு செய்ய மத்திய குழு வருகிறது. பொங்கல் நாளில் வருவதை வைத்தே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் நோக்கத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். -வைகோ (ம.தி.மு.க.தலைவர்)

*தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி. அதனால் அந்தக் கூட்டணி தானாகவே வீழும். தன் ஊழல்களை மறைக்கவும்,  கலவரத்தை தூண்டவும், முன்னாள்  மத்திய அமைச்சர் சிதம்பரம், திட்டமிட்டு குடியுரிமைச் சட்டதிருத்தத்தை எதிர்த்து பேசி வருகிறார். -ஹெச்.ராஜா (பா.ஜ.க. தேசிய செயலாளர்)


*தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச் சென்றால் கவலை இல்லை. அக்கட்சிக்கு ஓட்டே கிடையாது, அவர்கள் பிரிந்து சென்றாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 
-துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)
 

-விஷ்ணுப்ரியா
 

click me!