தலித்துகளை சீண்டிய ஆர். எஸ். பாரதியும் அரைவேக்காடு பாலாவும் ... எகிறி பாய்ந்து அடித்த வன்னி அரசு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2020, 11:31 AM IST
Highlights

இன்றைக்கு தமிழ்நாட்டில் தீவிரமாக இந்துத்துவத்தையும் சாதியத்தையும் கோட்பாட்டு புரிதலோடு எதிர்ப்பவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தான். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிய- மதவெறிக்கும்பல் எப்படியாவது விடுதலைச்சிறுத்தைகளை வீழ்த்த வேண்டும் என்று துடிக்கிறது. 
 

திமுக பொறுப்பாளர்களில் ஒருவரான திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களின் தரம் தாழ்ந்த-சமூக நீதிக்கு எதிரான உரையை கேட்டவர்கள் எல்லோரும் கோபங்கொண்டனர். யார் மீது ? அப்படி பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது! ஆனால் இது தான் தருணம் என்று திமுகவை அப்படியே அடித்து சாய்த்துவிட வேண்டும் என்று பலர் வரிந்து கட்டினர். அவர்களது உள்நோக்கம் எப்படியாவது திமுகவை அழித்து விட வேண்டும் என்னும் நோக்கத்தை தவிர எதுவும் இல்லை.  திரு.பாரதி அவர்களின் பேச்சை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவரது பேச்சு சமூகநீதிக்கு எதிரானது.  அவர் ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் சமூகநீதி கொள்கைக்கு எதிரானதாகும்.  அது மட்டுமல்ல சாதிய உளவியலின் வெளிப்பாடுதான்.  ( பிபிசியில் எனது  முழுமையாக பேட்டியை பார்க்கலாம்) அதற்காக திமுக என்னும் பேரியக்கத்தை வீழ்த்த துடித்து வருகின்றனர்.  

இப்படி ஒரு பிரிவினர். இன்னும் சில அரைவேக்காடுகள்,“ஆகா இது தான் நல்ல தருணம்”என்று விடுதலைச்சிறுத்தைகளை மிக கீழ்த்தரமாக தூற்றி வருகின்றனர். அதில் ஒருவர் பாலா எனபவர். கார்ட்டூனிஸ்டு என்று சொல்லிக்கொள்வார். கார்ட்டூன் என்றால் ஒரு அழகியல், அரசியல் இருக்கும்.  வன்மம் இருக்காது.  எதிராளிகள் கூட அந்த கார்ட்டூனை ரசிப்பார்கள். அப்படி தான் கார்ட்டூனிஸ்டுகள் உதயன், மதி போன்றோரின் கார்ட்டூன்கள் இடம்பெற்றன. இவர்களுடைய அந்த அரசியல் கேலி கிண்டல்களை பார்ப்பற்காகவே தினமணி பேப்பரை வாங்கியவர்கள் உண்டு. அவர்களிடம் அந்த நேர்மை திறம் இருந்தது. விமர்சனத்தைக்குள்ளானோர் கூட ரசித்தனர். ஆனால் இப்போது அப்படி எந்த கார்ட்டூனிஸ்டும் இல்லை. மதன் அவர்களின் கார்ட்டூன்களை கூட கேலிச்சித்திரங்களின் பட்டியலில் தான் சேர்க்க முடியுமே தவிர திரு. உதயன் பட்டியலில் சேர்க்க முடியாது. அப்படித்தான் ‘அரைவேக்காடு பாலா’வும். தன்னை முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பவரே தவிர முழுக்க முழுக்க அவர் சார்ந்த சாதிய பின்புலத்தில் தான் சிந்திப்பவர்,செயல்படுபவர்.சாதியம் குறித்து பேசினால் ‘கள்ள’மவுனம் கொள்வார்.
பெண்களை அவதூறாக எழுதுவது. குறிப்பாக சின்மயி மீதான தனிப்பட்ட பிரச்சனையை பொதுவாக்கி பெண்களையே கொச்சைபடுத்தி எழுதி வருபவர்.  இப்படிப்பட்டவர் தான் அதே சாதிய வன்மத்துடன் கார்ட்டூன் என்னும் பெயரில் தமது வன்மத்தை தீட்டியுள்ளார். 

திரு.ஆர்.எஸ்.பாரதி ‘திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசியதில் உண்மையாகவே அவர் மீது தான் பாலாவுக்கு ஆத்திரம் பீறிட்டிருக்க வேண்டும். அவர்மீதும் அவரது சாதிய உளவியல் குறித்தும் தமது ஆத்திரத்தை கொட்டியிருக்க வேண்டும். ஆனால் பாலாவுக்கு அந்த துணிச்சலோ, தெளிவோ இல்லை. அவரது நோக்கம் விடுதலைச்சிறுத்தைகளை திட்டவேண்டும். அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அரைவேக்காடு பாலாவுக்கு திரு.பாரதியின் சாதிய வன்ம பேச்சு கிடைத்தது. விடுதலைச்சிறுத்தைகள் தமிழகச்சூழலில் ஒரு நம்பிக்கைக்குரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சனாதன சங்பரிவாரக்கும்பலுக்கு எதிராக சமரசமில்லாமல் களமாடி வருகிறார். இன்றைக்கு தமிழ்நாட்டில் தீவிரமாக இந்துத்துவத்தையும் சாதியத்தையும் கோட்பாட்டு புரிதலோடு எதிர்ப்பவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தான். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிய- மதவெறிக்கும்பல் எப்படியாவது விடுதலைச்சிறுத்தைகளை வீழ்த்த வேண்டும் என்று துடிக்கிறது. அந்த கும்பலில் ஒருவன் தான் ‘அரைவேக்காடு பாலா’! ( அந்த கார்ட்டூனே சாட்சி) 

திமுகவை வீழ்த்தினால் தான் மதவாத பாஜக வளரமுடியும். அதனால் திமுகவை வீழ்த்த சங்பரிவாரக்கும்பல் துடித்துக்கொண்டு இருக்கிறது. கழகங்கள் அல்லாத பாஜகவின் முழக்கம் இந்த பின்னணியில் தான். இந்த அரசியல் சூழ்ச்சியை புரிந்து கொள்ளமுடியாத சில அரைவேக்காடுகள் திமுக மீதான வன்மத்தை கக்கி வருகின்றன. அப்படிதான்  விடுதலைச்சிறுத்தைகளை வீழ்த்த சாதிய- மதவெறிக்கும்பல் துடித்துக்கொண்டு இருக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவிலேயே போராடுகிற ஒரே அம்பேத்கரிய பின்னணியிலான இயக்கம் விடுதலைச்சிறுத்தைகள் தான். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாமைக்கு முதன்மை ஆற்றலாக இருப்பதும் விடுதலைச்சிறுத்தைகள் தான். இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத அரைவேக்காடுகள் ‘கார்ட்டூன்’என்னும் பெயரில் சாதிய வன்மத்தை கக்கி வருகிறார்கள். திரு.ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு பின்னால் எப்படி சாதிய உளவியல் இருக்கிறதோ அதைப்போலத்தான் 
பாலாவுக்கும் இருப்பதை புரிந்துகொள்வோம்!

click me!