குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக ஆதரவாளரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவருமான ஆடிட்டர் குருமூர்த்தி சென்னை, மயிலாப்பூர், தியாகராஜபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி அதிகாலை 3.15 மணி அளவில் குருமூர்த்தி வீடு உள்ள தெருவில் 3 பைக்குகளில் 6 பேர் சந்தேகத்துக்குரிய வகையில் வந்துள்ளனர். குருமூர்த்தி வீட்டில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் மணிகண்டன் இதை கவனித்துள்ளார்.
அப்போது, பைக்கில் வந்தவர்களில் ஒருவர் மஞ்சள் பையில் இருந்து பெட்ரோல் குண்டை எடுத்து வீச முயன்றுள்ளார். இதைப் பார்த்த காவலர் மணிகண்டன், அவர்களைப் பிடிக்க முயல அதற்குள் தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீஸார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சசிகுமார்(வயது 33), தீபன்(32), ஜனார்த்தனன்(36), பாலு(30), பிரசாந்த்(23), வாசுதேவன்(32), குமரன்(42), கண்ணன்(27), சக்தி(22), தமிழ்(23) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.