தி.மு.க ராஜ்யசபா எம்.பி.,க்கள்... அந்த 3 பேரை லிஸ்ட் போட்ட மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published May 25, 2021, 5:29 PM IST
Highlights

அந்த 3வது நபர் யார் என்றால், மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் ராஜ்ய சபா எம்.பி-யாக நியமிக்கப்படுவார் என்று கூறுகின்றனர்.
 

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து அதிரடியான அரசு நிர்வாகத்திலும் ஆட்சியிலும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருடைய நடவடிக்கைகளை நிர்வாக வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் வரவேற்று வருகின்றனர்.

இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் பங்களிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் சபரீசன் வீட்டில் சோதனை நடத்தினர். திமுகவுக்காக தேர்தல் தேர்தல் பிரசார உத்திகளை வகுக்க தேர்தல் உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்ததில் சபரீசனின் பங்கு முக்கியமானது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே போல, வாக்குப்பதிவு அன்று மு.க.ஸ்டாலினும் சபரீசனும் பிரசாந்த் கிஷோரைவும் அவரது குழுவினரையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஸ்டாலின்தான் தராரு, விடியல் தரப் போறாரு, விடியலை நோக்கி போன்ற கோஷங்கள் பரவலாக்கியதில் சபரீசனுக்கு பெரிய பங்கு உண்டு. அதே போல, 9 மாவட்டங்களுக்கான கிராம உள்ளாட்சி தேர்தலும் தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலும் நடத்தப்படாமல் உள்ளது. இந்த தேர்தலிலிலும் சபரீசனின் பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக ஒன்றும் மோசமாக தோற்றுவிடவில்லை. ஆனால், அதிமுகவின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தங்கள் ராஜ்யசபா எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கு முன்னதாக, மார்ச் மாதம் அதிமுக ராஜ்ய சபா எம்.பி முகமது ஜான் காலமானார். இதனால், அதிமுக 3 ராஜ்ய சபா பதவிகளை இழந்தது. தமிழ்நாடு சார்பில் 3 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாக உள்ளது.

இந்த 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கும் தற்போது தேர்தல் நடத்தினால், இந்த 3 எம்.பி பதவிகளும் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்ள்ளது. அதனால், திமுகவில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த 3 பதவிகளுக்கு இப்போதே திமுகவில் நீயா நானா என்ற போட்டி நிலவுகிறது. ஆனாலும், இவர்கள் தான் ராஜ்ய சபாவுக்கு டெல்லி செல்லக்கூடிய 3 பேர் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு மிகவும் குறைவான வாக்குகளில் தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செல்வனும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த கார்த்திகேய சிவசேனாபதியும் ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அந்த 3வது நபர் யார் என்றால், மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் ராஜ்ய சபா எம்.பி-யாக நியமிக்கப்படுவார் என்று கூறுகின்றனர்.

இதன் மூலம், மு.க.ஸ்டாலின் தனது மருமகனை ராஜ்ய சபா எம்.பி ஆக்கி டெல்லி அரசிலை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, மு.க.ஸ்டாலின், மாநில அரசியலில் தனது மகன் உதயநிதியை திமுக இளைஞரணி செயலாளராக்கியதோடு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெறச் செய்து மாநில அரசை கவனிப்பதற்கான வழியை செய்துள்ளார். இப்போது, மருமகனிடம் டெல்லி அரசியல் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!