ஆலமரமாய் அடக்கும் ஸ்டாலின்..! சூரியனின் ஒளி படாத செடிகளாய் மாறிய மற்ற தலைவர்கள்

By Asianet TamilFirst Published Mar 1, 2021, 6:51 PM IST
Highlights

திமுகவில் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க செயற்குழு கூடியபோது “ கலைஞர், ஸ்டாலின் எனும் ஆலவிழுதை விட்டு சென்றுள்ளார்” என துரைமுருகன் பேசினார்.ஆனால், ஸ்டாலினோ தானே அந்த ஆலமரமாக மாறி அதன் கீழுள்ள விழுதுகளை நசுக்க ஆரம்பித்துவிட்டார்.

திமுகவில் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க செயற்குழு கூடியபோது “ கலைஞர், ஸ்டாலின் எனும் ஆலவிழுதை விட்டு சென்றுள்ளார்” என துரைமுருகன் பேசினார்.ஆனால், ஸ்டாலினோ தானே அந்த ஆலமரமாக மாறி அதன் கீழுள்ள விழுதுகளை நசுக்க ஆரம்பித்துவிட்டார்.

பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது  என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  கட்சி உறுப்பினர்களுக்கு அறிக்கை விட்டார். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்னவோ ?

ஸ்டாலினை தலைமையில் அமரவைத்து அழகு பார்த்த திமுகவின் மூத்த தலைவர்கள்,தற்போது நாங்களும் திமுக தலைவர்கள்தான் என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஸ்டாலின் தன்னை மட்டும் முன்னிறுத்தி மற்ற தலைவர்களை பின் வரிசையில் இருக்கும்படி செய்ய ஐபெக் நிறுவனம் திட்டமிட்டுருக்குமோ என்னவோ ? துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா,கே என் நேரு , ஆ ராசா, ஏன் கனிமொழி  என திமுகவில் பல முன்னணி மூத்த தலைவர்கள் உள்ளனர். ஆனால், திமுகவின் எல்லா முடிவுகளையும் மற்ற தலைவர்களை ஆலோசிக்காமல் ஸ்டாலின் மட்டுமே எடுத்து வருகிறார்.மூத்த தலைவர்களை மதிக்காமல் உதயநிதிக்கு பிரதிநிதித்துவம் அளித்தது மற்ற தலைவர்களை முகம் சுழிக்க வைத்த செய்தி ஏற்கனவே வந்தது. எனினும்,தன்னுடைய வழி ஐபேக் வழி என்று ஸ்டாலின் தான் வராரு.

துறைமுகம் பகுதியில் கடந்த வாரம் நடந்த கட்சி நிகழ்ச்சியில் மின்விளக்கு அலங்காரத்தில் ஸ்டாலின்,கலைஞர், அண்ணா ஆகியோர் முகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. திமுக உருவாக காரணமாக இருந்த திராவிடர் கழகத்தை  உருவாக்கிய பெரியாரை மறந்துவிட்டார்களா அக்கட்சியினர்?!

ஸ்டாலின் தான் வராரு…. முதல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் வரை திமுகவின்  அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் அவரது பெயர் மட்டும் எதிரொலிப்பது இன்னும் மோசம்.சென்னை மேயர், எம்.எல்.ஏ, அமைச்சர்

என பல பதவிகளில் இருந்திருந்தாலும்  மக்களிடம் அவரது பாட்சா பலிக்கவில்லை. அதனால், அனைத்து வழிகளிலும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்,கட்சியின் சிறிய ஸ்டிக்கர் முதல் பரப்புரை கூட்டம் வரை தன்னுடைய படங்களை  நிரப்பி புதிய பிகேவின் ஐபேக் யோசனைகளை கேட்டு நடந்து வருகிறார்.

தற்போதைய தலைவர்கள் மட்டுமல்ல காலம் கடந்தும் பெருமை பெற்ற பெரியார், அண்ணா போன்ற தலைவர்களையும்  திமுக மறந்துவிட்டது.அதற்கு பல நிகழ்வுகள் சான்றாக உள்ளன.தமிழை உயர்த்தி தமிழ்நாட்டிற்கென வாழ்ந்த தலைவர்களின் இயக்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் ஸ்டாலின், வடநாட்டு நிறுவனமான ஐபெக்கின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிந்து வேலேந்தி நின்ற காட்சி கட்சி தொண்டர்கள் வரை திணறடித்தது.

தமிழகத்தின் மாபெரும் அரசியல் இயக்கமாக விளங்கியது  திராவிட முன்னேற்ற கழகம்.  கருணாநிதி காலம் சென்ற பிறகு திமுகவின்  மதிப்பும்,முன்னேற்றமும் அஸ்தமிக்கும் சூரியனை போல மங்கி கொண்டிருக்கிறது.

 

click me!