நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்றும் ஜோதிமணிக்கு சீட் ஒதுக்க கூடாது என திமுகவினர் புகார் எழுப்பிவரும் நிலையில், அந்த தொகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவியை வேட்பாளாராக நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் திருவிழா தமிழகத்திலும் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம், ஒருங்கிணைப்பு குழு பல குழுக்களை அமைத்து தேர்தல் பணியை விரைவு படுத்தியுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியுடன் திமுக முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்கியது.
இதில் காங்கிரஸ் கட்சி 12 இடங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுகவை பொறுத்தவரை 7 முதல் 8 இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து திமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் திமுக தலைமை அழைத்து தொகுதி நிலவரத்தை கேட்டறிந்தது.
ஜோதிமணி மீது புகார் தெரிவிக்கும் திமுக
அதன்படி அங்குள்ள வெற்றிவாய்ப்பு, யாரை வேட்பாளாராக நிறுத்தலாம் என கருத்து கேட்கப்பட்டது. அப்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 5 வருடமாக மக்களுக்கு எந்தவித திட்டமும் செயல்படுத்தவில்லையென்றும், தொகுதி பக்கமே வரவில்லையென புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஜோதிமணிக்கு இந்த முறை கரூர் தொகுதி ஒதுக்க கூடாது என வலியுறுத்தி இருந்தனர். எனவே திமுகவே இந்த முறை கரூர் தொகுதியில் களத்தில இறங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு திமுக தலைமை நல்ல பதில் விரைவில் சொல்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும் யாரை வேட்பாளாராக நிறுத்தினாலும் வெற்றிக்கு பாடு பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
செந்தில் பாலாஜி மனைவி போட்டியா.?
இதனிடையே கரூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த முறை திமுகவே போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே கரூர் தொகுதியில் அனைவருக்கும் தெரிந்த நபர் செந்தில் பாலாஜி, தற்போது அமலாக்கத்துறை பிடியில் சிக்கியுள்ளதால் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியின் மனைவியை வேட்பாளராக நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்