"எடப்பாடி பழனிசாமிக்கு சாப விமோசனமே கிடையாது.." ஓங்கி அடிக்கும் நாஞ்சில் சம்பத் !

By Raghupati RFirst Published Jun 21, 2022, 2:50 PM IST
Highlights

DMK Vs AIADMK : வலிமை வாய்ந்த கட்சியை உருக்குலைத்து, அந்த இடத்தில் உட்கார்ந்து கொள்ள பாஜகவின் நரித்தனத்திற்கு இன்று பழனிசாமி பலியாகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சாப விமோசனமே கிடையாது.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.  திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதாக கூறி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு அடியாட்கள் சேர்க்கும் வேலை இந்த வேலை. 17 வயதில் படித்து முடித்து விட்டு ஓர் மாணவன் உயர்கல்வி பெற முடியாமல் காலாண்டு காலம் ராணுவத்தில் சேவை ஆற்றி விட்டு அதில் 10 சதவீதம் பேரை மட்டும் ராணுவம் தக்க வைத்து கொள்ளும். 

மீதியுள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றால், வெளியேறுகிறவர்கள் எங்கே போவார்கள்? இந்த செயலை கூச்சமில்லாமல் செய்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தி தொடர்பாளர்கள் தவறுதலாக சித்தரித்ததன் விளைவு இந்தியாவின் அமைதி இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களை இன்று அழுத்தி கொல்லுகிற மோடி அரசு 2024ல் மீண்டும் ஆட்சிக்கு வர மக்களை திசை திருப்புகிறார். எதிர்கட்சிகளை திட்டமிட்டு பழி வாங்குகிறார். மராட்டிய மண்டலத்தில் மாலிக் என்கிற அமைச்சர் பொய் வழக்கு புனையப்பட்டு சிறையில் இருக்கிறார். 

இதையும் படிங்க : அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சரை கைது செய்து சிறையில் வைத்து விட்டு அவரது வீட்டில் ரைடு நடைபெறுகிறது. இளைஞர்கள் கடைசி கட்டத்தில் ராணுவதிலாவது சேரலாம் என்றால், அதற்கும் வழி இல்லாமல் போனது. எதிர்கட்சிகள் மோடியை வீட்டுக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகையில் அனைவரையும் திசை திருப்ப அக்னி பத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த அக்னி இவர்களை சுட்டு பொசுக்கும். ராணுவத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஒற்றை தலைமையா ? அதெல்லாம் கிடையாது என்று வித்தாரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

தனதுஅடியாட்களை அஜண்டா இல்லாமல் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேச வைத்து, ஒற்றை தலைமை என்று எடப்பாடி பழனிச்சாமி அத்துமீறுகிறார். எம்.ஜி.ஆருக்கே அறிமுகம் இல்லாத ஒரு இடைசெருகல் அந்த கட்சியை கைப்பற்ற துடிக்கிறது. அந்த கட்சிக்குள் பூகம்பம் வெடித்து இருக்கிறது. கட்சியின் அதிகார பூர்வமான ஒருங்கிணைப்பாளரை கட்சியை விட்டு நீக்குகிற நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகிறார் என்றால் இந்த செயலுக்கு பின்னால் பி.ஜே.பி தான் உள்ளது என குற்றம் சாட்டுகிறேன். 

வலிமை வாய்ந்த கட்சியை உருக்குலைத்து, அந்த இடத்தில் உட்கார்ந்து கொள்ள பாஜகவின் நரித்தனத்திற்கு இன்று பழனிசாமி பலியாகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சாப விமோசனமே கிடையாது. கட்சியின் சீனியர் செங்கோட்டையன் தான். அவர்தான் தலைவர் ஆகணும். கட்சி உடையாமல் இருக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே ரெடி.! அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் ஓபிஎஸ் வட்டாரம்

click me!