
திமுகவின் ஆன்மீக இரட்டை வேடம் என்ற குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அடிக்கடி எழுப்பப்படும் நிலையில் திராவிட மாடல் எம்.பி, தமிழச்சி தங்பாண்டியன் மார்கழி மாதம் பிறந்ததையொட்டி ஆண்டாள் வேடமிட்டு பக்தியில் திளைத்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.
திமுகவின் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு, நாத்திகம் கொள்கைகளை ஒப்பிடும்போது, கட்சித் தலைவர்கள், அரசு நடவடிக்கைகளில் ஆன்மீகம்,மத நடைமுறைகளை ஏற்பது அவர்களின் இரட்டை வேடத்தை அவ்வப்போது வெளிப்படுத்துகிறது. திமுகவின் வேர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றோரின் பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பை மையமாக கொண்டுள்ளது. ஆனால் இன்று மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றோர் கோவில்களுக்குச் செல்வது, பூஜைகளில் பங்கேற்பது வாக்கு வங்கி அரசியல் என பாஜக, அதிமுகவினர் விமர்சிக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின், ‘சனாதன தர்மத்தை வேரறுப்போம்” என்று கொக்கரிக்கும் நிலையில் திமுகவினர் கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை இரட்டை வேடம்என்கின்றனர் எதிர்கட்சியினர்.
திமுகவின் கொள்கை பகுத்தறிவு அடிப்படையிலானது என்று கூறப்பட்டாலும் தமிழகத்தில் 90%க்கும் மேற்பட்டோர் மத நம்பிக்கையுடையவர்கள் என்பதால், தற்போடு வாக்கு அரசியலில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க முயற்சி செய்கிறது திமுக. இந்நிலையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மார்கழி மாதத்தின் முதல் நாளான இன்று மலர்ந்த தாமரையை சூடிய நாச்சியாராக ஆண்டாள் வேடம் பூண்டு மகிழ்ந்துள்ளார். இதற்கு மு.க.அழகிரியின் மருமகளான அனுஷா தயாநிதி ஹார்டின் ஸ்மைலி போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் ஆண்டாளாக வேடமிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ‘‘அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை பாடி அருளவல்ல பல்வலையாய் - நாடி நீ வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’’ என ஆண்டாள் திருப்பாவையையும் பகிர்ந்துள்ளார்.
இதனை பாஜக போன்ற எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, ‘‘மார்கழி முதல் நாளான இன்று, தென் சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் ஆண்டாள் வேடமிட்டு பக்தி பரவசத்தில். மேடைக்கு மேடை "சனாதனத்தை வேரறுப்போம்", "பெரியார் மண்" என்று முழங்கும் திராவிட மாடல் கொள்கை, மார்கழி பனியில் கரைந்து விட்டதோ?
சனாதன தர்மத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் கூட, இறுதியில் ஆழ்வார்களின் தமிழ் ஆன்மீகத்திற்கு அடிபணியத் தான் வேண்டும். இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் திமுகவினர், ஓட்டுக்காகவும், காலத்தின் கட்டாயத்தாலும் ஆண்டாள் நாச்சியாரை கையில் எடுத்திருப்பது ஆச்சரியமில்லை. இளவரசர் சனாதனத்தை ஒழிப்பேன் என்கிறார். எம்.பி-யோ ஆண்டாள் வேடம் போடுகிறார். இதுதான் தி.மு.க-வின் இரட்டை வேடம். எது எப்படியோ, நாத்திகம் பேசுபவர்களையும் "ஓம் நமோ நாராயணாய" என்று சொல்ல வைத்த ஆண்டாள் நாச்சியாரின் மகிமையே தனி தான். இது ஆன்மீக மண்ணின் வெற்றி’’ என விமர்சித்துள்ளார்.
நெட்டிசன்கள் சிலர், ‘‘மதுவந்தி நடனமாடிய காட்சியை விட இந்த வேடம் கொடுமையாக உள்ளது.நல்ல வேளை நடனக் காட்சி வீடியோவாகப் வெளியிடவில்லை.பொழுது போகாத எம்.பி. போக்கற்ற வாக்காளர்கள். திராவிட மாடல் வெல்க’’ என கமெண்ட் அடித்துள்ளனர்.