
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார் பீகார் பொதுப்பணித் துறை அமைச்சர் நிதின் நபின். மறைந்த பாஜ மூத்த தலைவரும், பீகார் முன்னாள் எம்எல்ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகனான நிதின், ஆர்எஸ்எஸ் பின்னணியை கொண்டவர். பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று, 2 முறை அமைச்சராக இருந்தவர்.
இந்நிலையில், புதிய தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்க நிதின் நபின் நேற்று மதியம் பாட்னாவில் இருந்து டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பல்வேறு பாஜ தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து கட்சி தலைமையகத்திற்கு வந்த நிதின் நபினை ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் வரவேற்றனர். அமித்ஷா முன்னிலையில் பாஜவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாஜவில் தலைமுறை மாற்றத்தை குறிக்கும் வகையில், புதிய தேசிய செயல் தலைவராக தேர்வாகி உள்ள 45 வயதாகும் நிதின் நபின், ஜே.பி.நட்டாவுக்குப் பிறகு பாஜ தேசிய தலைவராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘நிதின் நபின் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நிதின் நபினுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மிக உயர்ந்த பொறுப்பு, அவரது அமைப்புத் திறமை, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் பொதுச் சேவையின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
அவரது தலைமையில், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இந்த அமைப்பு மேலும் புத்துணர்ச்சி பெற்று வலுப்பெறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த முக்கியப் பொறுப்பில் அவர் எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன்’’ எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள நிதின் நபின் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி, எடப்பாடி பழனிசாமி அவர்களே’’ எனத் தெரிவித்துள்ளார்.